உள்ளூர் செய்திகள்

‘தாய்மொழியில் படித்தால் எளிதில் புரியும்’

சென்னை: “தாய்மொழியான தமிழில் படிக்கும்போது, பாடத்தை புரிந்து படிக்க முடிகிறது,” என ரமேஷ்பிரபா தெரிவித்தார். ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில், ரமேஷ்பிரபா பேசியதாவது:‘தினமலர்’ ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி 10 - 12 ஆண்டுகளாக மிகப் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வருவது, கண்கூடாகத் தெரியும் உண்மை. பல சமயங்களில் மேல்தட்டு மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு விஷயத்தை, மாநகராட்சி மாணவர்களுக்கும் செய்ய வேண்டும் என்ற அக்கறையோடு தொடர்ந்து பல ஆண்டுகளாக, மாநகராட்சி மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு ‘தினமலர்’ ஆசிரியருக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். மாநகராட்சி மாணவர்களுக்கு இரண்டு பிரச்னை. அது படிப்பு சம்பந்தமானது அல்ல. பெரிய பெரிய பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப் போல, மாநகராட்சி பள்ளியில் படிக்கும் நம்மால் மேலே வர முடியுமா என்பது ஒரு பிரச்னை. கண்டிப்பாக வருவோம். உழைப்பாளர்களின் பிள்ளைகள் என்றும் தோற்றதில்லை. உங்களுக்கு அனுபவரீதியான அறிவு உள்ளது. எந்தப் பள்ளியிலிருந்து வருகிறோம் என்பது தடையே கிடையாது. தமிழ் வழியில் படித்தால் மேலே வர முடியுமா? என்றால், அதுவும் முடியும். தாய்மொழி, தமிழ் மொழியில் படிக்கும்போது புரிந்து படிக்கிறோம். இது உலகளவில் நிரூபிக்கப்பட்ட உண்மை. தமிழ் மொழியில் படித்தால் கல்வி அமைச்சராகலாம். பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்வழிக் கல்வியில் படித்து உங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். இந்த இரண்டு தாழ்வு மனப்பான்மையையும் நீக்கி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு ரமேஷ் பிரபா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்