பொறியாளர்களாக உருவெடுத்த குழந்தை தொழிலாளர்கள்
மாநிலத்தில், அனைத்து பணிகளிலும் குழந்தை தொழிலாளர் நிரம்பி கிடக்கும் வேளையில், தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு திட்டத்தின் மூலமும், வாழ்க்கையில் சிலர் உயர்ந்துள்ளனர் என்பதற்கு, இரண்டு இளைஞர்கள் உதாரணமாக இருக்கின்றனர். குழந்தை தொழிலாளராக இருந்து, சாப்ட்வேர் இன்ஜினியராக உயர்ந்துள்ள மோகனிடம் பேசியதில் இருந்து... குழந்தை தொழிலாளியானது எப்படி? என் சொந்த ஊர் சேலம் மாவட்டம். வீட்டு கஷ்டத்தால, சின்ன வயசுலயே வெள்ளி பட்டறையில வேலைக்கு சேர்ந்துட்டேன். 9 வயசுல என்னை, அதிகாரிகள், பள்ளியில சேர்த்தாங்க. அப்போது தான் முதன் முதலா, பள்ளியையே பார்த்தேன்.இரண்டு வருஷம் சிறப்பு பள்ளியில படிச்சேன்; சாதாரண பள்ளியில, 6வது வகுப்புல சேர்த்தாங்க. 10ம் வகுப்புல, 387, பிளஸ் 2வுல, 897 மதிப்பெண் எடுத்தேன். கே.சி.எஸ். ரங்கசாமி இன்ஜினியரிங் கல்லூரியில, பி.இ., (கணினி அறிவியல்) படிச்சேன்.படிச்சு முடிச்சதும், கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சுது. சென்னையில இருக்கும் தனியார் நிறுவனத்துல வேலை செய்றேன். சம்பளமாக, 17 ஆயிரம் ரூபாய் தர்றாங்க. யார் அதிகம் குழந்தை தொழிலாளி ஆகுறாங்க? குழந்தை தொழிலாளரா இருந்து, வாழ்க்கையில முன்னேறிய பசங்க, தங்கள் சொந்த கதைகளை வெளியே சொல்ல மாட்டாங்க. அப்படி கதையை சொன்னாலும், மாற்றுத் திறனாளிகள் பார்க்குற மாதிரி எங்களையும் பரிதாபமாக பாக்குறாங்க. குடும்ப கஷ்டம், அப்பா, அம்மா இல்லாத பசங்க தான் பெரும்பாலும் குழந்தை தொழிலாளராகுறாங்க. குழந்தை தொழிலாளராக இருந்து, மெக்கானிக்கல் இன்ஜினியராக உயர்ந்துள்ளதன சேகரிடம் பேசியதில் இருந்து... நீங்கள் குழந்தை தொழிலாளரானது எப்படி? என் சொந்த ஊர், சேலம் மாவட்டம். நாலாவது வரைக்கும் படிச்சேன். வீட்டு கஷ்டத்தால படிப்ப விட்டுட்டு கறிக்கடையுல, வேலைக்கு போனேன். நான் அங்க வேலை செய்றத பார்த்த, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், பள்ளியில சேர்த்தாங்க. படிச்சாலும், மீதி நேரத்துல தைத்தறி வேலைக்கு போனேன். 10வதுல, 357, பிளஸ் 2வுல, 1,057 மதிப்பெண்கள் எடுத்தேன். நாமக்கல், முத்தம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில, மெக்கானிக் இன்ஜினியரிங் படிச்சேன்.பிளஸ் 2 வரைக்கும் தமிழிலேயே படிச்சதால, முதல் மூணு மாசம் ரொம்ப கஷ்டமாக இருந்தது. படிப்பே வேணாம்ன்னு, வீடுக்கு போயிட்டேன். தைரியத்தை வரவழச்சிட்டு மீண்டும் படிச்சேன். கஷ்டப்பட்டு படிச்சு, இரண்டாவது செமஸ்டருல, பாஸ் மார்க் எடுத்தேன். படிச்சி முடிச்சதும், கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சிடுச்சு. கர்நாடக மாநிலத்துல இருக்குற, இடாக் இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை செய்யுறேன். பயிற்சி கால சம்பளமாக, 15 ஆயிரம் ரூபாய் தராங்க. ஆறு மாசம் கழிச்சு, 30 ஆயிரம் ரூபாய் சம்பளம். என் சம்பளத்துல இருந்து, மாதம் 10 சதவீத தொகையை, என்னை படிக்க வைச்ச இல்லத்துக்கு தந்துட்டு இருக்கேன். குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்படுவது எப்படி? தமிழகத்தில், சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளால், ஆயிரக்கணக்கான குழந்தை தொழிலாளர்கள் உருவானதை அடுத்து, 1987ல், தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில், செங்கல் சூளை, அரிசி ஆலை, பீடி தயாரிக்கும் தொழிற்கூடம், பட்டாசு, தீப்பெட்டி, ஓட்டல் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்படுகின்றனர். எந்த வகுப்பில் பள்ளி படிப்பை கைவிட்டனரோ, அதிலிருந்து இரண்டு ஆண்டுகள், சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு, பின் பள்ளியில் மற்ற மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்கும் வகையில், மாணவர்களை உருவாக்கி விடுகின்றனர். இதுவரை தொழிலாளர் நலத்துறை மூலம், 70 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொறியியல், மருத்துவ படிப்பை முடிந்துள்ளனர்.