பாரதியார் பல்கலையில் ‘பாரதியார் நகரம்’
கோவை: “பாரதியின் பாடல்களுக்கு சிறப்பு செய்யும் நோக்கத்துடன் பாரதியார் பல்கலை வளாகத்தில், ‘பாரதியார் நகரம்’ கட்டப்படவுள்ளது. ஒவ்வொரு பவுர்ணமியிலும் பாரதியின் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டு, ஆடல், பாடலுடன் கொண்டாடப்படும்,” என பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறினார். மகாகவி பாரதியின் 127ம் பிறந்த நாள் விழா, பாரதி ஐந்தமிழ் விருதுகள் வழங்கும் விழா மற்றும் பாரதி - பெரியசாமித்தூரன் கருத்தரங்கத் துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா, பாரதியார் பல்கலையில் நடந்தது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஊடகத் தமிழ் ஆகிய ஐந்து பிரிவுகளில் சிறப்பு வாய்ந்த ஐந்து பேருக்கு மகாகவி பாரதியின் பெயரில், ‘ஐந்தமிழ் விருதுகள்’ வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கு டிச. 11ம் தேதி நடந்த முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன், கவிஞர் யுகபாரதி, புலவர் மணியன் (இயற்றமிழ் விருது), பித்துக்குளி முருகதாஸ், வீணை சரஸ்வதி (இசைத்தமிழ் விருது), அழகப்பன், சோமசுந்தரன் (நாடகத்தமிழ் விருது), விஞ்ஞானி முத்து, டாக்டர் கணேசன் (அறிவியல் தமிழ் விருது), தென்கச்சி சுவாமிநாதன் (ஊடகத்தமிழ்) ஆகியோர் விருது பெற்றனர். பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது:பாரதி ஒரு பொக்கிஷம். பாரதியாரின் பெயரால் அழைக்கப்படும் இப்பல்கலையில், அனைவரும் காலையில் பாரதியின், ‘எண்ணிய முடிதல் வேண்டும்’ என்ற பாடல் வரிகளை பாடி விட்டுதான் பணிகளை துவங்குகின்றனர். பாரதியின் பெயரில் ‘வெப்சைட்’ துவங்கப்பட்டுள்ளது. பல்கலை டெலிபோனில் கூட பாரதி பாடல்தான் ‘ரிங் டோன்’ ஆக வைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரையும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற பாரதியின் விருப்பத்துக்கு ஏற்ப, பல்கலையின் கீழ் உள்ள கல்லூரிகளில் தற்போது 1,600 ஏழை மாணவர்கள் இலவசமாக படிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்கலையில் உள்ள பாரதி ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் ‘பாரதி‘ என பெயரிடப்பட்டுள்ளது. பல்கலை விடுதிகள், துறைகள், ‘செல்லம்மா, கண்ணம்மா, கம்பர், பெரியார், சேக்கிழார்’ உள்ளிட்ட பெயர்களால் அறியப்படுகின்றன. பாரதியின் 128வது பிறந்த நாளில் அவரது பாடல்கள் இந்தியிலும் வெளியிடப்படும். பாரதியின் பாடல்களை ஆங்கிலத்தில் ஆய்வு செய்து கட்டுரை சமர்ப்பிக்க அனுமதித்துள்ளோம். பாரதியின் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள விருதுகளுக்காக 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படும். அடுத்தாண்டு முதல் 10 மாணவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படும். பல்கலை வளாகத்துக்குள் விரைவில், ‘பாரதியார் நகரம்’ கட்டப்படவுள்ளது. அடுத்தாண்டு முதல் ஒவ்வொரு பவுர்ணமியிலும் இங்கு பாரதியின் பாடல்கள் அடங்கிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கவிஞர் தூரன் கந்தசாமியின் கலைக்களஞ்சியம் மறு பதிப்பு செய்யப்படும். இவ்வாறு, துணைவேந்தர் திருவாசகம் பேசினார். தமிழக அரசின் உயர்கல்வி மையத் துணைத் தலைவர் ராமசாமி பேசுகையில், ‘பாரதியார் பல்கலையின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பாரதியின் பெயருக்கு சிறப்பு செய்வது போல் இனி தமிழகத்தில் உள்ள காமராஜர் பல்கலை, அண்ணா பல்கலை, அழகப்பா பல்கலை, பெரியார் பல்கலை உள்ளிட்ட அனைத்து பல்கலைகள், கல்லூரிகளிலும் அத்தலைவர்களின் பாடல்களில் இரு வரிகளை ஒலிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சி.பி.சி.எஸ்., பாட முறையின்படி, வெளி மாநிலத்தவரும் தமிழை ஒரு பாடமாக படிக்க வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது‘ என்றார்.