உள்ளூர் செய்திகள்

சீன ஆசிரியர்களுக்கு ‘யுனெஸ்கோ’ பயிற்சி

ஐ.நா., சபையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான யுனெஸ்கோ உலகெங்கும் கல்வி, சமூக மற்றும் கலாசார மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. சீனாவில் மிகவும் பிற்பட்ட கிராமப்புற பகுதிகளில் கல்வியறிவை ஏற்படுத்தும் முயற்சியில் யுனெஸ்கோ தற்போது முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சீனாவில் படித்து பட்டம் பெற்ற தன்னார்வ இளைஞர்களுக்கு இந்த முயற்சியின் ஒரு பகுதியாக பயிற்சிகளை யுனெஸ்கோ தரவிருக்கிறது. ‘டீச் பார் சீனா‘ என்னும் சீனாவுக்கான சிறப்புத் திட்டத்தின் மூலமாக இந்த புதிய முயற்சிகள் செயல்படுத்தப்படவுள்ளன. அடுத்த ஆண்டு பருவப் படிப்புகள் துவங்கும் காலமான பிப்ரவரியில் இந்த முயற்சிகளும் துவங்கும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த முயற்சியின் முதற்கட்டமாக சீனாவிலுள்ள 12 பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் தரப்படும். இவர்கள் 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் சீனாவின் பின்தங்கிய பகுதிகளிலுள்ள கிராமப்புற பள்ளிகளிலும் பெற்றோர் வேலை நிமித்தமாகச் சென்றதால் பாதிக்கப்பட்டுள்ள மாணவருக்கான சிறப்புப் பள்ளிகளிலும் பணிபுரிய வேண்டும். வரும் 2010ம் ஆண்டு வாக்கில் மொத்த பயிற்சி ஆசிரியர்களின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் உள்ள ’சன் யாட் சென் பேமிலி பவுண் டேஷன்’ என்னும் அமைப்பு இந்த முயற்சிகளுக்கான நிதியுதவியை ஆரம்ப கட்டத்தில் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்