உள்ளூர் செய்திகள்

நெல்லை மாணவியுடன் பிரதமர் பேசுகிறார்

திருநெல்வேலி: 9ம் வகுப்பிற்கு பிறகு நேரடியாக பல்கலையில் பிடெக் பயிலும் சாதனை மாணவியை, பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சில் பேசி பாராட்டுகிறார். திருநெல்வேலி, கோர்ட் அருகே சங்கர்நகரில் வசிக்கும் கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகாவின் மகள் விசாலினி 15. சிறுவயதில் மழலைப்பேச்சுக்கே திணறியவர். தற்போது கம்ப்யூட்டர் துறையில் தமது வயதை கடந்த சாதனைகள் படைத்துவருகிறார். தற்போது நெல்லை லட்சுமிராமன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். சிறுவயதிலேயே கம்ப்யூட்டர் துறையில் பல்வேறு கடினமான தேர்வுகளை எழுதியுள்ளதை பாராட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பிடெக் முதலாம் ஆண்டில் பயில அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது தாயார் சேதுராகமாலிகா கூறியதாவது: சிறுவயதில் விசாலினியை, டாக்டர் ஒருவரிடம் அவளது பேச்சு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றபோது அவரது அறிவுகூர்மை எனப்படும் ஐ.கியூ.,225 அளவில் இருப்பதை தெரிவித்தார். இதுவழக்கத்தை விட அதிகமாகும். எனவே பள்ளியில் பயிலும் போது இரட்டை புரமோசன் என்னும் வகையில் இரண்டு வகுப்புகளை ஒரே ஆண்டில் கடந்து தேர்வானார். ஏழாம் வகுப்பு பயிலும்போதே கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் துறையில் ஆன்லைனில் நடத்தப்படும் சி.சி.என்.ஏ., மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., சி.சி.எஸ்.ஏ., எக்சின் கிளைவுட் கம்ப்யூட்டிங் என கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள் எழுதக்கூடிய தேர்வுகளை எழுதி தேர்வாகியுள்ளார். சர்வதேச கருத்தரங்குகளிலும் பங்கேற்று பேசியுள்ளார். டில்லியில் நடந்த கூகுள் கல்வியாளர் உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக விசாலினி பேசினார். கூகுளின் சுட்டிப் பேச்சாளர் என பாராட்டப்பட்டார். பிரதமர் பேசுகிறார்..! ஆசிரியர் தினத்தையொட்டி நாளை 4ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஏற்பாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் டில்லியில் பிரதமர் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். அப்போது இந்தியா முழுவதும் பத்து மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுடன் வீடியோ கான்பரன்சிங்கில் பேசுகிறார். நெல்லையை சேர்ந்த விசாலினியுடன் நாளை 4ம் தேதி காலை 11 மணிக்கு, பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ்சிங்கில் பேசுகிறார். இதற்காக இன்று 3ம் தேதியே நெல்லையில் கலெக்டர் கருணாகரன் முன்னிலையில் மாதிரி நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்