உள்ளூர் செய்திகள்

கலை நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு தடை

சண்டிகர்: அரசு மற்றும் பொது விழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில், பள்ளி மாணவர்கள் பங்கேற்பதற்கு, அரியானா மாநில அரசு தடை விதித்துள்ளது. அரியானா மாநிலத்தில், பா.ஜ., கட்சியின் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள் மற்றும் முதல்வர், அமைச்சர் கள் பங்கேற்கும் விழாக்களில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சில தினங்களுக்கு முன், முதல்வர் கட்டார் கலந்து கொண்ட ஒரு விழாவில், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏறக்குறைய இரண்டரை மணி நேரம், சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்த மாணவர்கள், வெறும் காலுடன், கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதைப் பார்த்த முதல்வர், அரசு மற்றும் பொது விழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில், பள்ளி மாணவர்கள் பங்கேற்க உடனே தடை விதித்தார். கலை நிகழ்ச்சிகளில், மாணவர்கள் கலந்து கொள்ள வற்புறுத்தக்கூடாது என, பள்ளி கல்வி துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார். முதல்வரின் இந்த உத்தரவை கேட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்