உள்ளூர் செய்திகள்

தனியார் பல்கலை.,ஆரம்பிப்பதை ஊக்குவிக்க முடிவு

புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பல்கலைக் கழகங்கள் ஆரம்பிப்பதை ஊக்கவிக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான பொறியியல், மருத்துவக் கலை கல்லுாரிகள் இருந்த போதிலும், மாநில பல்கலைக் கழகங்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை. நிகர்நிலை பல்கலைக் கழகங்களாக தங்களை அறிவித்த கல்லுாரிகளும் உயர் கல்வியில் பெரிதாக எதுவும் சாதிக்க வில்லை. வேகமாக மாறி வரும் கல்விச் சூழலை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உயர் கல்வியை மேம்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான தனியார் பல்கலைக் கழகங்களை ஆரம்பிக்க அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான கொள்கை முடிவுகள் அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி இரண்டு வகைகளில் தனியார் பல்கலைக் கழகம் ஆரம்பிக்க முடியும். முதலாவது ஒரு குறிப்பிட்ட பாடப் பிரிவுக்கான பல்கலைக் கழகத்தை துவங்கலாம். அதாவது பொறியியல் பல்கலைக் கழகமாக அல்லது மருத்துவ பல்கலைக் கழகமாகவோ, சட்ட பல்கலைக் கழகமாகவோ தனியாக ஆரம்பிக்கலாம். இரண்டாவது, மருத்துவம், பொறியியல், பாராமெடிக்கல் என பல பாடப் பிரிவுக்களை இணைத்து பல்கலைக் கழகமாக துவங்க முடியும்.  தனியார் பல்கலைக் கழகம் ஆரம்பிக்க உதவும் தனி நபர் அல்லது, அறக்கட்டளை பல்கலைக் கழகமாக துவங்குவதின் நோக்கம், பல்கலைக் கழக அமைய உள்ள இடம், பல்கலைக் கழக தலைமையிடம், கல்லுாரியின் சிறப்பு அம்சங்கள், பாடத் திட்டம், விளையாட்டு திடல், பாட வாரியான செலவினங்கள், ஐந்தாண்டிற்கான தொலைநோக்கு திட்டங்களை குறிப்பிட்டு உயர் கல்வித் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், 25 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு துறையிலும் ஒரு பேராசிரியர், 2 விரிவரையாளர், ஊழியர்கள் நியமித்து பல்கலைக்கழகம் துவங்க பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட பாடப் பிரிவுக்கான தனியார் பல்கலைக் கழகத்திற்கு குறைந்தப்பட்சம் 25 ஏக்கர் நிலம் இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும். அத்துடன், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்திருந்தால் ரூ.1.5 கோடியும், வெளியே அமைந்திருந்தால் 1 கோடி ரூபாய் பல்கலைக் கழகம் அறக்கட்டளை நிதியாக முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். பல வகை பாடப் பிரிவுக்கான தனியார் பல்கலைக் கழகம் துவக்க, குறைந்தது 150 ஏக்கர் இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும். அத்துடன், நகராட்சி பகுதியில் அமைந்திருந்தால் ரூ.5 கோடியும், வெளியே அமைந்திருந்தால் 4 கோடி ரூபாய் பல்கலைக் கழகம் அறக்கட்டளை நிதியாக முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை பரிசீலிக்க குழு அமைக்கப்படும். இந்த குழு பல்கலைக்கழக வளாகத்தை பார்வையிட்டு, கல்வித் துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இந்த அறிக்கை மீது அமைச்சரவை அனுமதி அளித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும், தனியார் பல்கலைக் கழகம் துவங்க அனுமதி அளிக்கப்படும். தனியார் பல்கலைக் கழகம் துவங்கி பதினைந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். இல்லையெனில் பல்கலைக் கழகத்தின் அனைத்து சொத்துகளை அரசு கையகப்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்