வரலாறு கேள்வித்தாள் வடிவம் மாற்றியமைப்பு?
திருச்சி மாவட்ட பள்ளிகளில் பணியாற்றும் கம்யூட்டர் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி மேலப்புதூர் பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 70க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியை துவக்கிவைத்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் பேசியதாவது: ஆசிரியர்கள் புதிய தகவல்களை தெரிந்து கொண்டால் தான் மாணவர்களுக்கு கொண்டு செல்ல வாய்ப்பாக இருக்கும். மாணவர்கள் கேள்விக்கு ஆசிரியர்கள் தெரியவில்லை என்று சொன்னால், ஆசிரியர்களுக்கு மரியாதை போய்விடும். மாணவர்கள் தான் ஆசிரியர்களை சரியாக எடை போடக்கூடியவர்கள். மாணவர்கள் பார்வையில் ஆசிரியர்கள் செயல்பாடுகள் சரியாக இருக்கவேண்டும். அரசின் நல்ல திட்டங்கள் கல்வித்துறை மூலம் தான் செயல்படுத்தப்படுகிறது. பள்ளியில் மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் கூறும் தகவல், அன்று மாலையே அவர்களின் குடும்பத்துக்கு போய் சேர்ந்து விடும். இந்தளவுக்கு வேறு எந்த தகவல் தொடர்பு சாதனமும் சேராது. எனவே ஆசிரியர்கள் எச்சரிக்கையுடனும், மாணவர்கள் மீது அக்கறையுடனும் செயல்பட வேண்டும். சமீபத்தில் நோபல் பரிசுபெற்ற வெங்கட் ராமகிருஷ்ணன் பள்ளியில் படிக்கும் போது அறிவியல் போட்டிகள் நிறைய நடந்துள்ளது. அதில் கலந்து கொண்டதன் பயன்தான் நோபல் பரிசு பெற்றதாக அவர் கூறியுள்ளார். கல்வித்துறை குறித்து ஆசிரியர்கள் அதிக கவலை கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு முழு ஈடுபாட்டுடன் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். திருச்சி மாவட்டத்தில் ப்ளஸ் 2வில் 52 பாடப்பிரிவுகள் நடத்தப்படுகிறது. இதில் 32 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் பிரிவில் 99. 9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெறாததால் கம்ப்யூட்டர் பிரிவில் 100 சதவீதத்தை பெறமுடியவில்லை. வரலாறு பாடத்தில் தான் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். 100 பேரில் 88.78சதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். வரலாற்று பாடத்தில் உள்ள கேள்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தால், அதிலும் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவர். வரலாற்று பாடத்தின் கேள்வித்தாள் வடிவத்தை மாற்ற கல்வித்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்தின் ஆசிரியர்களும் தங்கள் பிரிவில் 100 சதவீத தேர்ச்சிக்கு முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பிலோமினாள் பள்ளி தலைமை ஆசிரியை கிரேஸியா, ஒருங்கிணைப்பாளர்கள் ரெங்கநாதன், கருத்தாளர்கள் கணேஷ்குமார், ஷெரின், மாலினி, இமாகுலேட் மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்