வனக்கல்லூரி மாணவர் போராட்டம் ஏன்?
வனம், மரம், செடி, விலங்குகளை பற்றி நான்கு ஆண்டுகள் படிக்கும் வனவியல் பட்டதாரிகளுக்கு வனச்சரகர் பணியில் இடஒதுக்கீடு இல்லை. எனவே இட ஒதுக்கீடு கேட்டு மாணவர்கள் போராட்டம் செய்வது நியாயமானது&' என்று, பெற்றோரும் கல்லூரி ஆசிரியர்களும் கூறினர். தமிழக வனத்துறையில் வனச்சரகர் பணியிடங்களை வனவியல் படித்த மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். அதற்கான 100 சதவீத இட ஒதுக்கீட்டு அரசு ஆணையை பிறப்பிக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து கல்லூரி ஆசிரியர் கூறியதாவது: வனக்கல்லூரியில் வனம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பம், மண்ணின் தன்மை, வளம், மண் மேம்பாடு, உயிரினப் பாதுகாப்பு பற்றி பாடத்திட்டம் உள்ளது; மரம் வளர்ப்பு, மர இன மேம்பாடு, மரம் சார்ந்த தொழிற்சாலை, தொழில்நுட்ப மேம்பாடு குறித்தும் பாடத்திட்டம் உள்ளது. மரம், செடிகளில் நோய், பூச்சி தாக்குதல், அதன் பாதுகாப்பு, புவி சார்ந்த தொழில்நுட்பம் (ஜி.ஐ.எஸ்.,), கம்ப்யூட்டர் முறையில் வன வளத்தை அறிந்து அதை எவ்வாறு மேம்பாடு செய்வது குறித்து செயல் முறை விளக்கத்துடன் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. வனச் சட்டம் மற்றும் வனக் கொள்கைகள், உயிர் தொழில்நுட்ப முறையில் வனங்களை பாதுகாத்தல், புதிய ரக மரங்களை கண்டறிதல், வேளாண் காடுகள் வளர்த்தல் பற்றியும் பாடத்திட்டம் உள்ளது. புவியில் மாற்றத்திற்கான மரங்களின் பங்கு, மேலாண்மை தொழில் நுட்பம் உள்ளடங்கிய நான்காண்டு பி.எஸ்.சி., வனவியல் பட்டப்படிப்பு கடந்த 25 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. எந்த மலைப்பகுதியில், மண்ணின் தன்மைக்கு ஏற்ப எந்தெந்த வகை மரக்கன்று நட வேண்டும். மண் அரிப்பை தடுப்பது எந்த மரங்கள், மண்ணின் கெட்டித்தன்மை குறைந்தால் அதை எவ்வாறு சரி செய்வது போன்ற பாடங்கள் வனவியல் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, நாட்டின் தேவைக்கேற்ப இந்திய வனக்கொள்கை அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன்மூலம் வனம் சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் உருவாக்கப்படுகின்றனர். இந்திய வனக்கொள்கை அறிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தங்கள் தேர்வு செய்யும் வன அரசுப் பணிகளில், வனவியல் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியில் நியமிக்கலாம் என்றுள்ளது. இதன் அடிப்படையில் பிற மாநிலங்களில் வனவியல் பட்டதாரிகளுக்கு வனச்சரகர் பணியிடத்தில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆசிரியர் கூறினார். இதுபற்றி பெற்றோர் கூறியதாவது:இன்ஜினியரிங், மருத்துவம் போன்று பி.எஸ்.சி., வனவியலும் தொழில்நுட்ப படிப்பாகும். நான்கு ஆண்டுகளில் வனம், வனவிலங்குகள், எவ்வாறு வனத்தை வளர்ப்பது, மண்ணின் தன்மை உட்பட வனம் சார்ந்த படிப்பு படிக்கின்றனர்.நீலகிரியில் தற்போது 500க்கு மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வனவியல் படித்தவர்களை அப்பகுதியில் வனச்சரகராக நியமித்திருந்தால், இந்த விபத்து ஏற்பட்டதை தடுத்திருக்கலாம்.இந்தியாவில் வனவியல் படித்த பட்டதாரிகளுக்கு பிற மாநிலங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 100 சதம், ஹரியானா, இமாச்சலில் 70, கர்நாடகா, பீகாரில் 50, கேரளா, ஒரிசாவில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வனச்சரகர் பணியிட நியமனத்தில் தற்போது 54 சதவீம் பணிஉயர்வு மூலமாகவும், 45 சதவீதம் டி.என்.பி.எஸ்.சி., மூலமும், 1 சதவீதம் பணி மாற்றம் மூலமும் நிரப்பப்படுகிறது. 45 சதவீத பணியிடங்களை வனவியல் பட்டதாரிகளுக்கு அரசு வழங்க வேண்டும். இவ்வாறு, பெற்றோர் கூறினர்.