உள்ளூர் செய்திகள்

நிகர்நிலை பல்கலை சர்ச்சை நீடிப்பு

நாட்டில் தனியார் கல்லூரிகள் பல தங்களை நிகர்நிலை பல்கலைக் கழகமாக அறிவித்துக் கொண்டு செயல்படத் துவங்குகின்றன. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், பல்கலை மானியக் குழு தான், சம்பந்தப்பட்ட கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான விடுதிகள், வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் ஆகிய கட்டமைப்பு உட்பட, அனைத்து வசதிகளும் உள்ளதா என்பதை ஆய்வு செய்த பின்னரே, அவைகளுக்கு நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கும். ஆனால், முந்தைய ஆட்சியில், சில தனியார் கல்லூரிகள், இத்தகைய வசதிகள் முழுமையாக இல்லாத போதும், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் என்ற அந்தஸ்தை பெற்று, முழுமையாக செயல்படும் பல்கலைக் கழகங்கள் போன்று இயங்கி வந்தன. இதை தடுக்க, மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையிலான, மத்திய மனிதவள மேம்பாடு துறை அமைச்சகம் சில நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் தங்களை முழுமையாக செயல்படும் பல்கலைக் கழகங்களாக அழைத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டது.  ஆனால், அந்த நடவடிக்கைகள் மந்தமாகி உள்ளன. கர்நாடகாவில் ஆறு நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், அரியானாவில் மூன்று நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் தற்போதும், தங்களை முழு அளவில் இயங்கும் பல்கலைக் கழகங்களாக காட்டிக் கொள்கின்றன. இதனால், நிகர்நிலை பல்கலைக் கழகம் மற்றும் முழுஅளவில் செயல்படும் பல்கலைக் கழகங்கள் இடையேயான வேறுபாடுகளை அறிய முடியாமல், மாணவர்கள் தவிக்கின்றனர். எனவே, இது தொடர்பாக, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்