தினமலர் வழிகாட்டி: சென்னையில் நாளை
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., பி.டெக்., முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் சேர்க்கைக்கு, தமிழக உயர்கல்வித்துறையின் சார்பில், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கு, 1.88 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த கவுன்சிலிங்கில் மாணவர்கள் பங்கேற்று, தங்களின் விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கு வழிகாட்டும், தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னையில் இரண்டு இடங்களில் நாளை நடக்கிறது.தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில், காலை, 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரையிலும், தாம்பரம் டி.ஜி.பி. கல்யாண மண்டபத்தில், பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் நிகழ்ச்சி நடக்கிறது. சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியுடன் இணைந்து தினமலர் நாளிதழ் சார்பில், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் முறை, சிறந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தல், கட்- ஆப் மதிப்பெண்ணின் முக்கியத்துவம், தரவரிசை பட்டியலின்படி விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்வது, அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள், மிகுந்த பாடப்பிரிவுகள் என்ன ஆகியன குறித்து, இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வி நிபுணர்கள் நேரடியாக விளக்க உள்ளனர். தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின செயலர் புருசோத்தமன், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஆகியோர் பங்கேற்று, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் வழிமுறைகளை, மாணவர்களுக்கு தெரிவிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும், பெற்றோரும் இலவசமாக பங்கேற்கலாம். www.kalvimalar.com என்ற இணையதளத்தில், தங்கள் பெயர் விபரங்களை முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.