உள்ளூர் செய்திகள்

ஊழியர்கள் பற்றாக்குறையால் திறக்காத நுாலகங்கள்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில், 180 நுாலகங்கள் உள்ளன. இதில், 17 முழு நேர நுாலகங்களாக செயல்படுகிறது. காலை, மாலையில், தலா நான்கு மணி நேரம் செயல்படும் கிளை நுாலகங்கள், 55 உள்ளன. மீதமுள்ள, 108 பகுதி நேர நுாலகங்கள், தினமும், இரண்டு மணி நேரம் மட்டுமே செயல்படுகின்றன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு, நுாலகங்களை முறையாக பிரித்து வழங்கவில்லை. மொத்த நுாலகங்களை நிர்வகிப்பது, செங்கல்பட்டு மாவட்டமாக இருந்தாலும், சென்னை மாவட்ட எல்லையான, ஆலந்துார், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதியிலும், 25க்கும் மேற்பட்ட நுாலகங்கள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளை சென்னை மாவட்டத்தில் சேர்த்து, நான்கு ஆண்டுக்கு மேல் ஆகியும், நுாலகத்தை பிரித்து வழங்கவில்லை. இதனால், நுாலகர்கள் நியமிக்க முடியாமல், மாவட்ட நிர்வாகம் திணறுகிறது.பெரும்பாலான நுாலகங்கள், தினமும், இரண்டு மணி நேரம் செயல்படுகின்றன. ஊழியர்களுக்கு, தினக்கூலி அடிப்படையில், 100 ரூபாய் வழங்குவதால், பல பகுதி நேர நுாலகங்கள் முறையாக திறப்பதில்லை. இதனால், வாசகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும், பகுதி நேர நுாலகங்களை கிளை நுாலகமாகவும், கிளை நுாலகத்தை முழு நேர நுாலகமாகவும் தரம் உயர்த்த முடியாமல், அதிகாரிகள் திணறுகின்றனர். அதேபோல், ஊழியர்கள் பற்றாக்குறையால் துாய்மை பணி, துாசி படியாமல் புத்தகங்களை பாதுகாப்பது, ஆவணங்கள் பராமரிப்பு போன்ற பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், போதிய ஊழியர்கள் நியமித்து, நுாலகங்களை முறையாக திறக்க, நுாலகத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்