மாணவர்கள் இடையே ஒற்றுமை:பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சென்னை: மாணவர்கள் இடையே ஒற்றுமையை வளர்க்கவும், இதுபோன்ற நிகழ்வுகள், இனி வருங்காலங்களில் நிகழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கடந்த, 27 மாதங்களாக, தி.மு.க., ஆட்சியில் ஜாதிய மோதல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது, நாங்குநேரியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர் ஒருவரை, சக மாணவர்கள் தாக்கியதும்; தடுக்க முயன்ற சகோதரியை தாக்கியதும் கடும் கண்டனத்துக்கு உரியது. பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது, மிகவும் கவலை அளிக்கத்தக்கது. காயமடைந்த இருவருக்கும் தேவையான, உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். தேவையான நிதி உதவியை, தமிழக அரசு வழங்க வேண்டும். பள்ளிகளில் வேற்றுமையில் ஒற்றுமை என்று நிலவிய நிலை மாறியுள்ளது தான், இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம். இதை தவிர்க்க தேசப்பற்று, மனிதநேயம், மனிதாபிமானம், நீதி போதனைகள் போன்றவற்றை, பள்ளிகளில் ஆசிரியர்கள் போதிக்க வேண்டும். கல்வித் துறையை, கற்பித்தல் முறையை, ஆசிரியர் - மாணவர் உறவை பலப்படுத்த தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை தன் கையில் வைத்திருக்கும் முதல்வர், இதில் தலையிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே ஒற்றுமையை வளர்க்கவும், இதுபோன்ற நிகழ்வுகள், இனி வருங்காலங்களில் நிகழாமல் இருக்கவும், தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.