உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் கண் பரிசோதனை: மா.சுப்பிரமணியன்

சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவல் ஒருபுறமிருக்க, மெட்ராஸ் ஐ என்ற வெண்படல அழற்சி நோய் வேகமாக பரவி, பாடாய் படுத்தி வருகிறது. நோய்த் தொற்றில் இருந்து, பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, 12 லட்சம் பேருக்கு கண் பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்க மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னையில் பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனைகள் முதல் தனியார் மருத்துவமனைகள் வரை, காய்ச்சல் வார்டுகளில் தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இதில், சராசரியாக 20க்கும் மேற்பட்டோருக்கு, கொசுக்களால் ஏற்படும் டெங்கு, மலேரியா, நிமோனியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, தமிழக அரசு மற்றும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சமீப நாட்களாக மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் பாதிப்பும் பரவி வருகிறது. மெட்ராஸ் ஐ பாதிப்பை பொறுத்தவரை, 90 சதவீதம் குணப்படுத்தக்கூடியது மற்றும் இயல்பாக குணமடையக் கூடியது என்றாலும், அலட்சியமாக இருக்கும் பட்சத்தில், கண்பார்வை பாதிக்கப்படும் அபாயம் கூட ஏற்படலாம் என, டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.எனவே, கண் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, ஐந்து பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக ஏற்படும் பருவநிலை மாற்றத்தால், மெட்ராஸ் ஐ தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால், பள்ளி மாணவர்களை காக்கும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.எழும்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியன் கூறியதாவது: மெட்ராஸ் ஐ பாதிப்பை பொறுத்தவரையில், என்ட்ரோ வைரஸ்  -அடினோ வைரஸ் ஆகிய இருவகை இருப்பது கண்டறியப்பட்டது. ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், மற்றவருக்கும் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பாதிப்பு ஏற்பட்டால், கண்கள் மற்றும் கைகளை அடிக்கடி நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். கண்களுக்கு போதிய அளவு ஓய்வு அளிக்க வேண்டும்.நல்ல ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த வைட்டமின் - ஏ மற்றும் சி சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும். உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவற்றால் நோய் பாதிப்பில் இருந்து விரைவில் குணம்அடையலாம். மெட்ராஸ் ஐ குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுவதால், சென்னை மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 12 லட்சம் மாணவர்களுக்கு, கண் பரிசோதனை செய்யப்பட உள்ளது. வரும் 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை கண் பரிசோதனை நடைபெறும். இப்பணிகளில் அரசு கண் டாக்டர்கள், தனியார் டாக்டர்கள் என, 400க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.நோய் அறிகுறியும், பாதிப்பும்டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை பிராந்திய தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாசன் ஜி.ராவ் கூறியதாவது: கண் எரிச்சல், நீர் வடிதல், கண் சிவத்தல், ஒட்டிக்கொள்கிறவாறு கண்ணிலிருந்து அழுக்கு வெளியேற்றம் மற்றும் வெளிச்சத்தை பார்க்க கூச்சம் ஆகியவை, மெட்ராஸ் ஐ அறிகுறிகள்.கண்ணில் கருப்பு நிற படலத்தின், அடுக்கான கருவிழியில் தொற்று இருந்தால், அதனால் மங்கலான பார்வை ஏற்படக்கூடும். இந்த தொற்றால், சில நோயாளிகளுக்கு கண் வீக்கம், அழற்சியை ஏற்படுத்தி, குணமடைவதற்கு நீண்ட காலத்தை எடுத்துக் கொள்ளும்.மருந்து கடையிலிருந்து, ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை, மெட்ராஸ் ஐ பிரச்னைக்காக வாங்கி பயன்படுத்தி, குணமடையாமல் பலர் வருகின்றனர். சுயமாக மருந்து பயன்படுத்துவதையும், ஓடிசி மருந்து என்ற கண் சொட்டு மருந்துகளை உபயோகிப்பதையும் நோயாளிகள் தவிர்க்க வேண்டும். கண் டாக்டர்களின் பரிந்துரையின்படி மட்டுமே, மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்