உள்ளூர் செய்திகள்

தொழிற்கல்வி மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் களப்பயிற்சி

சூலூர்: தொழிற்கல்வி மாணவர்களுக்கு, தொழிற்சாலைகளில் களப்பயிற்சி அளிக்கப்பட்டது.சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,12 ம் வகுப்பு தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, 10 நாட்கள் உள்ளுறை பயிற்சி எனும் களப்பயிற்சி வழங்கப்படுகிறது. அதற்காக மூன்று தனியார் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்கும் விதம், இயங்கும் விதம், இயந்திரங்கள் மூலம் வடிவமைக்கப்படும் பொருட்கள் குறித்து நேரடி களப்பயிற்சி அளிக்கப்பட்டது.லேத், டிரில்லிங், கிரைண்டிங் உள்ளிட்ட இயந்திரங்களின் செயல்பாடுகளை அறிந்து கொண்டனர். அளவுகளை துல்லியமாக கணக்கிடும் வெர்னியர் காலிபர் , மைக்ரோ மீட்டர், முப்பரிமான கருவி, உயரம், ஆழத்தை அளக்கும் வெர்னியர், டிஜிட்டல் வெர்னியர் உள்ளிட்ட கருவிகளை எவ்வாறு கையாண்டு இயக்குவது குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர்.இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், களப்பயிற்சி எங்களுக்கு அடிப்படையான புரிதலை கொடுத்தது. உயர் படிப்புக்கும் உறுதுணையாக இருக்கும். படிப்பு முடிந்து தொழிற்சாலைக்கு பயிற்சிக்கு செல்லும் போது கைகொடுக்கும், என்றனர். தலைமையாசிரியர் ஜெயசீலி வழிகாட்டுதலுடன் தொழிற்கல்வி ஆசிரியர்கள் கதிர்வேல், தங்கவேல் பயிற்றுனர் செந்தில் ராஜன் ஆகியோர் பயிற்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்