கீழடி அருங்காட்சியகத்தில் குவிந்த மாணவர்கள்
கீழடி: கீழடி அருங்காட்சியகத்தில் நேற்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் வருவாய் நிர்வாக கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் ஆகியோரும் பார்வையிட்டனர்.கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மண்பாண்ட பொருட்கள், விளையாட்டு காய்கள், தங்க அணிகலன்கள், பாசிகள், மணிகள், வரிவடிவ எழுத்துக்கள், விலங்கின் எலும்புகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினசரி ஏராளமான பார்வையாளர்கள் கீழடிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.நேற்று காலை மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அருங்காட்சியகத்தை பார்வையிட வருகை தந்திருந்தனர்.பண்டைய கால மக்கள் பயன்படுத்திய பொருட்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அருங்காட்சியக மினி தியேட்டரில் கீழடி பற்றிய குறும்படத்தை கண்ட பின் பொருட்களை பார்வையிட்டு சென்றனர். ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்ததால் மினி தியேட்டரில் குறும்படத்தை காண மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.தமிழக வருவாய் நிர்வாக கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் கீழடி அருங்காட்சியகம் வந்திருந்தார். அவரை தாசில்தார் உமா (பொறுப்பு) வரவேற்றார். அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் அஜய் விளக்கமளித்தார்.