குடிநீர் விஷத்தால் மாணவர்கள் பாதிப்பு
கோலார்: பள்ளிக்கு விடுமுறை கிடைக்கும்; பெற்றோரை பார்க்கலாம் என்ற ஆசையில் மாணவர் ஒருவர் செய்த விபரீத செயலால், மூன்று மாணவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டது.கோலார், பங்கார்பேட்டின் தொட்டபொன்னான்டஹள்ளி கிராமத்தில், மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நேற்று முன் தினம், தண்ணீர் குடித்த மூன்று மாணவர்கள் மயங்கி விழுந்தனர். இவர்கள் கோலாரின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.மாணவர்களை பரிசோதித்த டாக்டர்கள், விஷ பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக காமசமுத்ரா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவானது. பள்ளிக்கு வந்து போலீசார் விசாரித்தனர். அப்போது தான், குடிக்கும் தண்ணீரில் எலி விஷம் கலந்திருப்பதை கண்டுபிடித்தனர். பள்ளிக்கு விடுமுறை அளித்தால் அவரவர் சொந்த ஊர்களுக்கு மாணவர்கள் செல்வர். தங்களின் பெற்றோருடன் இருப்பர். மற்ற நாட்களில் பள்ளி விடுதியிலேயே இருக்க நேரிடும்.பெற்றோரை பிரிந்திருப்பதால் இங்கு படிக்கும் மாணவர் ஒருவர், மன அழுத்தத்துக்கு ஆளானார். பள்ளிக்கு விடுமுறை அளித்தால், வீட்டுக்குச் செல்லலாம்; பெற்றோரைப் பார்க்கலாம் என, நினைத்தார். இதற்காக குடிநீரில் எலி விஷத்தை கலந்துள்ளார். போலீசார் விசாரித்தபோது, உண்மையை ஒப்புக்கொண்டார்.இவரது பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள். மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக, உறைவிடப் பள்ளியில் மகனைச் சேர்த்தனர். தற்போது மகனின் செயலால், மனம் நொந்துள்ளனர். மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.