உள்ளூர் செய்திகள்

பாரம்பரிய மருத்துவத்திற்கு ஆராய்ச்சிகள் தேவை

சென்னை: பாரம்பரிய மருத்துவம் வளர, அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் தேவை என தமிழக கவர்னர் ரவி பேசினார்.சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வளாகத்தில், கவர்னரின் எண்ணி துணிக என்ற தலைப்பில், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயுஷ் மற்றும் பாரம்பரிய மருத்துவர்களுக்கு கவர்னர் ரவி கேடயம் வழங்கி கவுரவித்தார்.பின், அவர் பேசியதாவது:நவீன மருத்துவத்திற்கான மாற்று மருத்துவம் குறித்து சிந்திப்பதில்லை. ஏராளமான ஞானம், பாரம்பரிய மருத்துவ முறைகளில் உள்ளது. நம் பெற்றோர், முன்னோர் தேவைப்படும் போது, பாரம்பரிய மருந்துகளை கொடுத்து குணப்படுத்துவர்; அதனால், பாரம்பரியத்தை மறப்பது மனிதத்திற்கு நல்லதல்ல. ஏராளமான சித்தர்கள், யோகிகள் இம்மண்ணில் பிறந்துள்ளனர்.நவீன மருத்துவம் உடலை இயந்திரமாக பார்க்கிறது. அது பலனளித்தாலும், பக்கவிளைவுகள் இருக்கின்றன. ஆனால், பாரம்பரிய மருத்துவம் உடலை முழுமையானதாக பார்க்கிறது. மனித உடல் என்பது ஒரு பொருள் அல்ல. எல்லா அறிவியலுக்கும், சில எல்லைகள் உள்ளன. உலகளவில் பாரம்பரிய மருத்துவத்தின் தேவை அதிகரித்து காணப்படுகிறது. மன ரீதியான பாதிப்புகளுக்கு, யோகா செய்ய டாக்டர்களே பரிந்துரை செய்கின்றனர். இதனால், உலகளவில் ஆயுஷ் சந்தை, 1.90 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நவீன மருத்துவம், ஆராய்ச்சிகள் வாயிலாக நிரூப்பிக்கப்படுகிறது. அதேபோல, பாரம்பரிய மருத்துவத்திற்கும் ஆழமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. ஆயுஷ் அவற்றை செய்யும் என நம்புகிறேன். நவீன மருத்துவம் ஒரே நாளில் வளரவில்லை. உலகளவில் இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம் வளர்ச்சி அடைகிறது. அதேபோல், நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரம் நிச்சயம் வளர வேண்டும். அதற்கு அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் தேவை. பாரம்பரிய மருத்துவ முறை உலகளவில் வளர, அதற்கான தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ஞானவர்ஷினீ அறங்காவலரான ஆயுர்வேத டாக்டர் மீரா பேசுகையில், கொரோனா பெருந்தொற்று பரவிய போது, பாரம்பரிய மருத்துவர்கள், 5,000 சிகிச்சை பரிந்துரைகளை அரசுக்கு அளித்தனர்.வருங்காலங்களில், இதுபோன்ற நோய் பாதிப்புகள் வந்தால், ஒரு லட்சம் பரிந்துரைகளை நாம் அளிக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும். எனவே, பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளுக்கு, ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக ஐந்து பல்கலைகளை உருவாக்க வேண்டும், என்றார்.நிகழ்வில், ஆயுர்வேத டாக்டர்கள் சுதீர், அய்யப்பன் கரியட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்