புத்தக கண்காட்சியில் அறிவியல் கோளரங்கம்
சிவகங்கை: சிவகங்கை புத்தக கண்காட்சி மற்றும் திருவிழாவில் அமைக்கப்பட்ட கோளரங்கத்தை 5 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், கல்வி, நுாலகத்துறை, பபாசி நிறுவனம் சார்பில் 3 ம் ஆண்டு புத்தக கண்காட்சி, திருவிழா ஜன.,27 முதல் பிப்., 6 வரை நடைபெறுகிறது.தினமும் காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை 110 ஸ்டால்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தகத்தின் விலையில் 10 சதவீத தள்ளுபடி தரப்படுகிறது. புத்தக கண்காட்சி மற்றும் திருவிழாவில் புத்தகங்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி மாணவர்களின் அறிவியல் தேடலை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கோளரங்கம் அமைத்துள்ளனர்.இங்கு வானவியல் சார்ந்த பதிவு, முப்பரிமாண வீடியோ மூலம் விளக்கம் அளித்தல் உட்பட அறிவியல் சார்ந்த நிகழ்வுகளை மாணவர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். கண்காட்சி திறந்து நேற்று வரை இக்கோளரங்கத்தை 5 ஆயிரம் மாணவர்கள் கண்டு ரசித்துள்ளனர்.அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, பொறுப்பாளர்கள் பிரபு, சாஸ்தாசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.