சைபர் கிரைம்; பெற்றோருக்கு விழிப்புணர்வு
உடுமலை: தொலைபேசி வழியாக வரும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து, எச்சரிக்கையாக இருக்க பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.சில நாட்களுக்கு முன்பு, கரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் கல்விதொகை வழங்குவதாக பெற்றோருக்கு தொலைபேசியில் அழைத்து, வாட்ஸ் ஆப் வாயிலாக, க்யூ ஆர் கோட் அனுப்பப்பட்டுள்ளது.அதை ஸ்கேன் செய்து அப்டேட் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறையின் மூலம் வந்துள்ளதாக நம்பிய பெற்றோர், ஸ்கேன் செய்து யுபிஐ பின் எண்ணையும் பதிவிட்டுள்ளனர். அதன் பின், பெற்றோரின் வங்கிக்கணக்கிலிருந்து தொகை காணாமல் போயுள்ளது.இது குறித்து புகார் பதிவு செய்துள்ளனர்.கல்வித்துறையின் அறிவுறுத்தலின் பேரில், உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில் இது தொடர்பாக கல்வித்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், மத்திய மாநில அரசுகளிடமிருந்து கல்வி உதவித்தொகை சம்பந்தமாக, எந்த ஒரு அதிகாரிகளும் பெற்றோரின் அலைபேசிகளுக்கு தொடர்பு கொள்ளமாட்டர்கள். நேரடியாக சந்தித்தோ அல்லது, தகவலாக கூறுவதற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.