ஓட்டுப்பதிவு; அரசு பள்ளிகள் தயார்
உடுமலை: லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, மாநிலம் முழுவதும் நாளை நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை முதல் ஓட்டுச்சாவடி மையங்களும், தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். உடுமலை சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளில், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.பள்ளிகளில் ஓட்டுச்சாவடி மையங்களாக மாற்றும் போது, மேஜைகள், இருக்கைகள் போட வேண்டிய இடங்களில் போட்டு வைப்பது, துாய்மைப்பணிகள், மின்சார வசதி, மின்விளக்குகள், பள்ளியின் பாதுகாப்பு உட்பட அனைத்து பணிகளையும் நிறைவு செய்துள்ளனர்.தலைமையாசிரியர்கள் கூறியதாவது:ஒவ்வொரு அரசு பள்ளிக்கும், வெவ்வேறு பகுதிகளிலிருந்து தான் அலுவலர்கள் வருகின்றனர். தேர்தல் பணிகளில் ஒன்றாக ஓட்டுசாவடி மையங்களில் போஸ்டர்கள், வழிகாட்டிகள் ஒட்டப்படுகின்றன.ஆனால் பல பள்ளிகளில், அவற்றை நீக்க முடியாத அளவு ஒட்டி விடுகின்றனர். இதனால், நீண்ட நாட்களாக பராமரிக்கப்பட்டு வந்த வண்ண மயமான பள்ளிச்சுவர்கள், மீண்டும் அசுத்தமாகின்றன.பள்ளிச்சுவர்களை முடிந்த வரை சேதப்படுத்தாமல், தேர்தல் போஸ்டர்களை ஒட்டுவதற்கு அலுவலர்கள் ஒத்துழைக்கலாம். அரசு பள்ளிகளில் மீண்டும் சுவர்களை புதுப்பிப்பது கடினம்.இவ்வாறு கூறினர்.