உள்ளூர் செய்திகள்

தவறவிட்ட கவுன்சிலிங்கில் மீண்டும் கலந்துகொள்ளலாமா?

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் ஏராளமான மாணவர்கள் கல்விமலர் இணையதளத்தில் முன்னதாகவே பதிவு செய்து மாலை 4 மணிமுதல் 5 மணிவரை தொலைபேசி மூலம் தங்களது சந்தேகங்களை ஆர்வத்துடன் கேட்டு விளக்கம் பெற்றனர். மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கேள்விகளும், அதற்கு கல்வி நிபுணர் அளித்த பதில்களும்: 131 கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ள எனக்கு எப்போது கவுன்சிலிங் நடைபெறும்?-வீரமணி, திருவொற்றியூர்140.50 கட்-ஆப் மதிப்பெண் வரையிலான மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கும் குறைவான கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். மூன்றாம் கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் துவங்க உள்ளது. அதுகுறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் வெளியிடும். 96.5 கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இன்ஜினியரிங் சீட் கிடைக்குமா?- வினோத்குமார், சிவகங்கைஇந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கவுன்சிலிங்கிற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இருக்கின்ற இடங்களின் எண்ணிக்கை 75 ஆயிரம் தான் என்ற சந்தேகம் எழலாம். ஆனால், ஜூலை 29ம் தேதி வரை ஏழாயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. இதேநிலை இனியும் தொடரும். கடந்த ஆண்டிலேயே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. இந்த கல்வி ஆண்டில் புதியதாக 71 இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்கப்படுகின்றன என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். எனவே, உங்களுக்கு இன்ஜினியரிங் சீட் கிடைக்கும். ஆனால், விரும்பிய கல்லூரியில், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்குமா என்பதை இப்போது கூற முடியாது. எனது அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை. இந்நிலையில், அவரை கவுன்சிலிங்கிற்கு கட்டாயம் அழைத்துச் செல்லவேண்டுமா?- அருண், கோவைஅப்பாவைத் தான் உடன் அழைத்துச்செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களது அம்மா அல்லது நெருங்கிய உறவினரைக்கூட கவுன்சிலிங்கிற்கு அழைத்துச்செல்லாம். கவுன்சிலிங்கில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கான முடிவை எடுக்க, உங்களுக்கு வழிகாட்டுபவராக அவர் இருப்பது நல்லது. பிளஸ் 2வில் தொழிற்பயிற்சி பாடப்பிரிவு படித்த எனது கட்-ஆப் 146. எனக்கு எப்போது கவுன்சிலிங்?- ராஜசேகர், திருச்சிதொழிற்பயிற்சி மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதில்155 கட்-ஆப் மதிப்பெண் வரை பெற்றவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கவுன்சிலிங் முடிந்தபிறகு உள்ள காலியிடங்களுக்கு மூன்றாம் கட்ட கவுன்சிலிங் அறிவிக்கப்படும். எனது மகள் 178 கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ளார். இந்த கட்-ஆப் மதிப்பெண்ணிற்கான கவுன்சிலிங் ஜூலை 25ம் தேதி நடந்துள்ளது. பண ஏற்பாடு செய்யமுடியாததால், அன்றைய கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளவில்லை. இனிமேல் கவுனிசிலிங்கில் கலந்துகொள்ளலாமா?- வாசுதேவன், ராமநாதபுரம்.தாராளமாக கவுன்சிலிங்கில் பங்கேற்று உங்களது மகளுக்கான இடத்தை தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால், கவுன்சிலிங்கில் பங்கேற்கும்போது உள்ள காலி இடங்களில் இருந்தே இடத்தை தேர்வு செய்ய முடியும். எனவே, இனியும் காலம் தாழ்த்த வேண்டாம். உடனடியாக புறப்படுங்கள். கல்லூரியில் இடம் பெற்ற பிறகுதான் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க முடியுமா?- குருபிரசாத், விருதுநகர்கண்டிப்பாக, உங்களுக்கு எந்த கல்லூரியில், எந்த பாடப்பிரிவில் இடம் கிடைத்துள்ளது, அந்த படிப்பிற்கு எவ்வளவு செலவாகும், அவற்றில் நீங்கள் எவ்வளவு தொகையை கடனாக கோருகிறீர்கள் ஆகிய கேள்விகளுக்கு உங்களிடத்தில் சரியான பதில் இருக்கும் பட்சத்தில்தான் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிக்க முடியும். எனவே, அட்மிஷன் பெற்ற பிறகு, அந்த கல்லூரி நிர்வாகத்திடம் படிப்பிற்கான செலவுகள் குறித்த உத்தேச மதிப்பீட்டு விவரத்தை கேட்டு பெறவேண்டும். பிறகு, உங்களது குடியிருப்பிற்கு அருகிலுள்ள வங்கியில் கல்விக்கடன் பெற அணுகுங்கள். 127.75 கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ள எனக்கு சிவில் இன்ஜினியரிங் சீட் கிடைக்குமா?- மஞ்சு, கரூர்நீங்கள் மூன்றாவது கட்ட கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட உள்ளதால், அதற்கு முன்பு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கவுன்சிலிங்கில் இடங்களை தேர்வு செய்துவிடுவார்கள். அப்போது, நீங்கள் விரும்பிய கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவு கிடைக்குமா என்பதை இப்போதே கூறுவது சரியாக அமையாது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியிட நிலவரம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. உங்களது கவுன்சிலிங்கிற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக உங்களது விருப்பத்திற்கு ஏற்பவும், கவுன்சிலிங் காலியிட நிலவரத்திற்கு ஏற்பவும் 3 அல்லது 4 கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை முன்கூட்டியே தேர்வு செய்துவைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் கவுன்சிலிங்கின் போது எந்தவித தடுமாற்றமும் இன்றி இருக்கின்ற இடங்களில் விரும்பிய படிப்புகளை தேர்வு செய்யமுடியும். எனது கட்-ஆப் மதிப்பெண் 130 எந்த கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்? இப்பாடத்திற்கான வேலை வாய்ப்புகள் எப்படி?- சங்கர், சேலம்எந்த படிப்பையும் ஆர்வத்துடன் நன்றாக படித்தால், உங்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயம். பாலங்கள், நெடுஞ்சாலைகள், வணிகவளாகங்கள், கட்டடங்கள், குடியிருப்புகள் போன்று உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள் பெருகிவரும் இந்த காலத்தில், அதிக எண்ணிக்கையில் திறமையான சிவில் இன்ஜினியர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே, சிவில் இன்ஜினியரிங் படித்தாலும், நன்கு படித்தால் வேலை வாய்ப்பை எளிதாக எட்டி பிடிக்கலாம். சிறந்த கல்லூரியை தேர்வு செய்வது எப்படி?- அருண்மோகன், கரூர்கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகள், அனுபவமிக்க ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பது முக்கியம். கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு எந்த அளவுக்கு கிடைக்கிறது என்பது அந்த கல்லூரியின் தரத்திற்கு ஒரு சான்று. நீங்கள் சேர விரும்பும் கல்லூரி குறித்து நேரில் சென்று பார்த்து வருவது நல்லது. அங்கு படிக்கும் மாணவர்கள் அல்லது முன்னாள் மாணவர்களிடம் விசாரித்தும் அறிந்து கொள்ளலாம். 131.75 கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ள எனக்கு எப்போது கவுன்சிலிங்? இன்ஜினியரிங் கல்லூரி உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என்று எப்படி அறிந்துகொள்வது?- அஜய்குமார், அருப்புக்கோட்டைமூன்றாம் கட்ட கவுன்சிங்கில் அழைக்கப்படுவீர்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் கவுன்சிலிங் நடைபெறும் அனைத்து கல்லூரிகளுமே ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்றவைதான். அத்துடன் பல்கலை இணைப்பும் பெற்றுள்ளன. மேலும், அங்கீகாரம் பெற்ற இன்ஜினியரிங் கல்லூரிகள் குறித்த தகவல்களை ஏ.ஐ.சி.டி.இ., இணையதளத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்