உள்ளூர் செய்திகள்

பெண்களுக்குக் கல்வி வழங்க 100 நாள் எழுத்தறிவுத் திட்டம்!

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் ஆண்களில் 82.42 சதவீதத்தினரும், பெண்களில் 64.43 சதவீத்தினரும் எழுத்தறிவு பெற்றுள்ளவர்கள். இதில் ஆண்களை விட பெண்கள் 20 சதவீதம் பின்தங்கியுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 69 சதவீதத்திற்கு மேல் உள்ளது. 10 மாவட்டங்களில் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 60 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. திண்டுக்கல்லில் 59.3, கரூர்- 57.3, திருவண்ணாமலை- 56.31, நாமக்கல்- 57.04, பெரம்பலூர்- 54.26, அரியலூர்- 52.03, சேலம்- 55.61, ஈரோடு- 55.26, விழுப்புரம்- 53.16, தர்மபுரியில் 49.1 என எழுத்தறிவு விகிதத்தில் இம்மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன. மாநில அளவில் ஆண், பெண் எழுத்தறிவு விகிதத்தை சம நிலைக்கு கொண்டு வர 100 நாள் எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின்படி 15 முதல் 35 வயதுள்ள படிக்காத பெண்களுக்கு கல்வி வழங்கப்படவுள்ளது. ஒரு ஓன்றியத்திற்கு ஒரு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு 100 நாட்கள் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். திட்டத்தை செயல்படுத்த ஊராட்சி தலைவர்கள் முன் வரும் பட்சத்தில், அங்கு எழுத்தறிவு இல்லாத பெண்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன்படி பெண்கள் தேர்வு செய்யப்பட்டு செயல் வழி கற்றல் முறையில் பாடம் நடத்தப்படும். அப்பகுதியில் உள்ள 8, 9 ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்கள் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை பாடம் நடத்துவர். வளர்கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் கூறுகையில், 2011 க்குள் பெண்களின் எழுத்தறிவு நிலையை உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செயல் வழி கற்றல் முறையில் பாட அட்டைகளை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும். இந்த முன்மாதிரி திட்டம், அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்