உள்ளூர் செய்திகள்

இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடி ஐ.நா., தகவல்

புதுடில்லி: உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்தியா விளங்குகிறது எனவும், தற்போது 144 கோடி பேர் வாழ்வதாக ஐ.நா., மக்கள் தொகை நிதியம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, அடுத்த 77 ஆண்டுகளில் இரு மடங்காகும் எனவும் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. சமீபத்தில், இந்த அமைப்பு சார்பில் உலகளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு குழுவினர் பங்கேற்று நடத்திய ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.இவற்றில், உலகளவில் அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்தியா உள்ளதாகவும், தற்போது 144.17 கோடி பேர் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில், நம் அண்டை நாடான சீனா 142.5 கோடி பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்த அமைப்பு நடத்திய ஆய்வில், நம் நாட்டின் மக்கள் தொகை அடுத்த 77 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும் என கணித்துள்ளது. ஐ.நா., மக்கள் தொகை நிதியம் நடத்திய இந்த ஆய்வில், பல்வேறு கூறுகளின் வாயிலாக மக்கள் தொகையின் விபரங்கள் ஆராயப்பட்டன.இதன்படி, நம் நாட்டில் 0 - 14 வயதுக்கு உட்பட்டோர் 24 சதவீதம் பேரும், 10 - 19 வயதுக்கு உட்பட்டோர் 17 சதவீதம் பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 10 - 24 வயதுக்கு உட்பட்டோர் 26 சதவீதம் பேரும், 15 - 64 வயது நிரம்பியவர்களின் எண்ணிக்கை 68 சதவீதம் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் 7 சதவீதம் பேர் உள்ளதாகவும் கணித்துள்ளது.நம் நாட்டில் வசிக்கும்ஆண்களின் சராசரி ஆயுள் 71 வயது எனவும், பெண்களுக்கு 74 வயது எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் தரமான சுகாதார சேவைகள் அளிக்கப்படுவதால், கருத்தரிக்கும் போது நிகழும் மரணங்கள் 8 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்