தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து18 பேர் காயம்
ஆத்துார்: ஆத்துார் அருகே, அதிவேகமாக சென்ற தனியார் மெட்ரிக் பள்ளி வேன், சாலையின் நடுவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 15 ஆசிரியைகள் உட்பட, 18 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, நடுவலுார் கிராமத்தில், ஜி.இ.டி., எக்ஸலன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. நேற்று, பள்ளிக்கு சொந்தமான, வேனில், ஆத்துார் டவுன் பகுதியில் உள்ள, 15 ஆசிரியைகள், டிரைவர்கள் மூவர் விடுதிக்கு தேவையான காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சென்றனர். காலை, 9:00 மணியளவில், ஆத்துார் - பெரம்பலுார் சாலையில், அதிவேகமாக சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையின் நடுவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் வந்த, 15 ஆசிரியைகள், மூன்று டிரைவர்கள் என, மொத்தம் 18 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள், 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், ஏழு பேர், மேல் சிகிச்சைக்கு சேலம் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து காரணமாக, ஆத்துார் - பெரம்பலுார் சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.