அறிவியல் மாநாட்டை தவிர்த்த 2 இஸ்ரோ பிரபலங்கள்
சென்னையில் நடந்துவரும் 98வது இந்திய அறிவியல் மாநாட்டில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் இரண்டு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. இஸ்ரோவின் தலைவராக தற்போது இருக்கும் கே. ராதாகிருஷ்ணன், விண்வெளி சம்பந்தமான கருத்தரங்கிற்கு தலைமை ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. அதேபோல் கல்விக்கூடம்-தொழிற்கூடம் ஆகியவற்றுக்கான தொடர்பை அதிகரிப்பது குறித்த கருத்தரங்கிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இவரைப்போலவே, இஸ்ரோவின் முன்னாள் தலைவராக இருந்த மாதவன் நாயரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அதேசமயத்தில், செயற்கைக்கோள் நிலையத்தின் இயக்குனரான தி.கே.அலெக்ஸ், விண்வெளி செயல்பாட்டு நிலையத்தின் இயக்குனர் ஆர்.ஆர்.நவல்குன்ட், செயற்கைக்கோள் ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த எஸ்.வி.கிபே போன்ற இஸ்ரோவின் மூத்த அதிகாரிகள் சிலர் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.