பள்ளி நலவாழ்வு பிரிவுகள் 3 ஒன்றியங்களில் அமைப்பு
கோவை: பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில், கோவை மாவட்டத்தில் மூன்று ஒன்றியங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த பள்ளி நலவாழ்வுப் பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன.தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ், ஆர்.பி.எஸ்.கே., ஆயுர்வித்யா திட்டத்தில், தமிழகம் முழுவதும் 100 வட்டாரங்களில் இப்பிரிவுகளை அமைக்க தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இதற்காக ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.பள்ளிப் பருவத்திலேயே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துவதுடன், அவர்களின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன்படி, கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டை, எஸ்.எஸ்.குளம், தொண்டாமுத்துார் ஆகிய மூன்று ஒன்றியங்களில் உள்ள சமுதாய நல மையங்களில் பள்ளி நலவாழ்வுப் பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன.