காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு போட்டி அறிவிப்பு
சென்னை: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு, கவர்னர் மாளிகை சார்பில் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில், நேற்று முதல் 24ம் தேதி வரை, காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது, காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான, தொன்மை நாகரீக பிணைப்பை கொண்டாடுவதையும், வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட கலாசார நிகழ்வாகும்.இரண்டு பகுதிகளையும் சேர்ந்த அறிஞர்கள், மாணவர்கள், தத்துவ ஞானிகள், வணிகர்கள், கலைஞர்கள், கைவினைஞர்கள் என, அனைத்து தரப்பினரும் பங்களிக்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து 1,000 பேர் பங்கேற்கின்றனர்.அயோத்தியில் ஸ்ரீராமர் பிராணப் பிரதிஷ்டை செய்த பிறகு நடக்கும் முதலாவது சங்கமமாகும். மகா கும்பமேளாவுடன் இணைந்து நடப்பதால், இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் தனி முக்கியத்துவம் பெறுகிறது. சித்த மருத்துவ முறைக்கும், தமிழ் இலக்கியத்திற்கும், மகரிஷி அகத்தியரின் பங்களிப்பு, இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் கருப்பொருளாக அமைந்துள்ளது.இதையொட்டி, தமிழக கவர்னர் மாளிகை போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்போர், தங்களின் அனுபவத்தை, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் குறைந்தது 1,000 வார்த்தைகளில் எழுதி, கவர்னரின் துணை செயலர், பல்கலை, கவர்னர் மாளிகை, சென்னை - 600022 என்ற முகவரிக்கு, மார்ச் 14க்குள் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.போட்டியில் பங்கேற்போர், தங்கள் பெயர், மொபைல் எண் போன்றவற்றையும் எழுதி அனுப்ப வேண்டும். தங்கள் அனுபவம் குறித்த கட்டுரையுடன், புகைப்படம், வீடியோ போன்றவற்றையும் அனுப்பலாம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள், தொழில் முனைவோர், பெண்கள், ஆராய்ச்சியாளர்கள் என ஒவ்வொரு பிரிவிலும், சிறப்பாக தங்கள் அனுபவத்தை எழுதியவர்களுக்கு, கவர்னர் பரிசு வழங்கி கவுரவிப்பார். முதல் பரிசாக 10,000; இரண்டாம் பரிசாக, 7,000; மூன்றாம் பரிசாக 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என, கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.