உள்ளூர் செய்திகள்

நிகர்நிலை பல்கலைக்கழகமானது ஐ.ஐ.எஸ்.எஸ்.டி.,

திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி (ஐ.ஐ.எஸ்.எஸ்.டி.,)க்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரையை ஏற்று மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஐ.ஐ.எஸ்.எஸ்.டி.,யை நிகர்நிலை பல்கலைக்கழகமாக அறிவித்துள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐ.ஐ.எஸ்.எஸ்.டி., தொடங்கப்பட்டது. விண்வெளி தொடர்பான படிப்புகளை வழங்குவதில் நாட்டில் சிறந்த கல்வி நிறுவனமாக இது கருதப்படுகிறது. தற்போது இந்த கல்லூரிக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கிடைத்துள்ளது. எனினும் இது தற்காலிகமானதே. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இது நிகர்நிலை பல்கலைக்கழகமாக செயல்படும். ஆண்டுதோறும் பல்கலைக்கழக மானிய குழு சார்பில் இந்த கல்லூரியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் யு.ஜி.சி.,யின் வல்லுனர் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப இதன் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து நிரந்தரமாக்கப்படும். இந்த கல்லூரி தனக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை சுயமாக மேம்படுத்திக்கொள்ளும் வரை, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் உதவியை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு யு.ஜி.சி., மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் புதிய படிப்புகள் வழங்கப்படும். இதனை தொடர்ந்து இந்த கல்லூரிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெறாத எந்த டிகிரியையும் வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல பிற கல்வி நிறுவனங்களுடன், கல்லூரிகளுடன் இணைந்து செயல்படவும் ஐ.ஐ.எஸ்.எஸ்.டி.,க்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன் கணக்குகள் அவ்வப்போது தணிக்கைக்கு உட்படுத்தப்படும். வர்த்தக நோக்கிலான செயல்பாடுகளும் இங்கு தடை செய்யப்பட்டுள்ளன. யு.ஜி.சி., மற்றும் தொலைதூர கல்வி கவுன்சிலிடம் அனுமதி பெறாமல் தபால் வழிக்கல்வி தொடங்கக் கூடாது, கல்லூரி வளாகத்துக்கு வெளியே கிளை மையங்கள் அமைக்ககூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் புதிய துறைகள் தொடர்பான இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப்படிப்புகளை தொடங்கும் படியும் இந்த கல்லூரிக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்