அங்கன்வாடி மையங்களில் அழகோவியங்கள்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாலா அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு வெறும் வர்ணசுவர்களோடு நின்று விடாமல், விளையாடி, எழுத்துக்களை புரிந்து கொள்ளும் வகையில் பாலா எனும் கட்டட வழி கற்பித்தல் முறையில் புதிய முயற்சியாக இந்த அங்கன்வாடி வடிவமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அங்கன்வாடி கட்டடங்கள் அனைத்திலும் வண்ணமயமான ஓவியங்கள், குழந்தைகளை கவரும் விலங்கு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இதில் ஒரு படி மேலே போய் வட இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் செயல்பட்டு வரும் பாலா அங்கன்வாடி முறை அதாவது கட்டடவழி கல்வி கற்று தரும் அங்கன்வாடியை உருவாக்கி உள்ளனர்.அருப்புக்கோட்டை கோபாலபுரத்தில் 3500 சதுர அடியில் ரூ.18.60 லட்சத்தில் அமைந்துள்ள இது அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது. காட்சி கவனிப்பு என்பது 2 முதல் 5 வயது குழந்தைகளுக்கு மிகப்பெரிய அறிவாற்றலை கொடுக்கிறது. கற்பனை திறனை வளர்க்கிறது. பாலா எனப்படும் பில்டிங் அஸ் ஏ லெர்னிங் ஏய்ட் எனப்படும் கட்டட வழி கற்பித்தல் காட்சி கவனிப்பு, அடிப்படை கல்வியை வண்ணமயான ஓவியங்கள், விளையாடுதல் மூலம் குழந்தைகளை எளிதில் கல்வி கற்க உதவுகின்றன.இந்த கட்டடத்தின் முகப்பு பகுதியில் வனம் போல் அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் கார்ட்டூன் ஓவியங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான மனநிலையை அளிக்கின்றன.அங்கன்வாடிக்குள் சுவர்களில் தமிழ் எழுத்துக்கள் அடங்கிய தத்ரூபமாக மாணவர்கள் அசைத்து பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. நகரும் வகையிலான அபாகஸ் அமைக்கப்பட்டுள்ளன. சுவர்களில் எண்களும், ஆங்கில எழுத்துக்களும் பல்வேறு வண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.இதே போல் அங்கன்வாடிக்கு வெளியில் குழந்தைகள் விளையாடுவதற்கான பல்வேறு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. குதிப்பது, விளையாடுவது உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வழி கற்பித்தல் முறைகள் உள்ளன. குழந்தைகளுக்கு கழிப்பறை வசதியும், கை கழுவும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறு வயது முதலே தீவிரமாக பின்பற்றினால் நிச்சயம் கழிப்பறை இல்லாத சூழ்நிலையை தவிர்க்கவும், தொற்று நோய் பரவல் காலங்களில் முறைப்படி கை கழுவவும் கற்று கொள்வர் என்று நம்புகின்றனர் அங்கன்வாடி ஆசிரியர்கள்.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் பத்மாவதி கூறியதாவது: 2 முதல் 5 வயது வரை பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இது போன்ற பாலா பள்ளி நல்ல கல்வியாற்றலை தருகின்றன. நிறைய யோசிக்க வைப்பதால் எதிர்கால கல்விக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். குழந்தைகளின் விளையாட்டு உணர்வை அதிகப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நிறம் ஆரஞ்சு. அந்த நிறத்தில் வண்ணமயமாக உட்புற சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன, என்றார்.கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: இது அறிவியல் பூர்வமாக கட்டப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல், மன வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தையே பார்த்து கற்று கொள்ளலாம். ஆசிரியர் மட்டுமின்றி தினசரி பள்ளிக்கு வருவதாலயே நிறைய கற்று கொள்ள இயலும். அடிப்படை எண்கள், எழுத்துக்கள், நிறங்கள் ஆகியவற்றை எளிதில் கற்று கொள்ள முடியும். இந்த அங்கன்வாடி மையத்திற்குள் வரும் போது வனத்திற்குள் வருவது போன்ற ஒரு மகிழ்ச்சியான மனநிலையை குழந்தைகளுக்கு வழங்குகின்றன, என்றார்.