உள்ளூர் செய்திகள்

புதுடில்லியில் குவிந்த தலைவர்கள்

புதுடில்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், மற்றொரு ஐரோப்பிய நாடான இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, நம் அண்டை நாடான வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஐ.நா., சபை பொதுச் செயலர் ஆன்டனி குட்டரெஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் நேற்று புதுடில்லி வந்தனர். விமான நிலையம் துவங்கி அவர்கள் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் வரை வழிநெடுகிலும், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நம் கலாசாரம், பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆடல், பாடலுடன் வழங்கப்பட்ட வரவேற்பு, தலைவர்களை வெகுவாக கவர்ந்தன. விமான நிலையத்தில் வந்திறங்கிய சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா, அங்கு நடனமாடிய கலைஞர்களை பார்த்து, கையசைத்தபடி நடனமாடியது உற்சாகத்தை அதிகரித்தது. தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், ஆப்ரிக்க யூனியன் தலைவரும், கோமோரோஸ் நாட்டு அதிபருமான அசாலி அசாவுமனி, ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ், மேற்காசிய நாடான ஓமனின் துணை பிரதமர் சையத் பாஹத் பின் மஹமூத் அல் சைத், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்சிசி, தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனிஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முஹமது பின் ஜையத் அல் நஹ்யான் உள்ளிட்ட தலைவர்களை, மத்திய அமைச்சர்கள் வரவேற்று உபசரித்தனர்.ஜனாதிபதியின் இரவு விருந்துமாநாட்டு வருகை தந்துள்ள உலக தலைவர்கள் மற்றும் நம் நாட்டின் தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று இரவு விருந்து அளிக்க உள்ள நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோர் இதில் கலந்து கொள்ள மாட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு விருந்துக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், அக்கட்சி ஆளும் கர்நாடகா, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில முதல்வர்கள் விருந்தை புறக்கணித்துள்ளனர்.காலிஸ்தான் பயங்கரவாதம் வேரறுக்கப்படும்மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியதாவது:காலிஸ்தான் பயங்கரவாதம் உள்ளிட்ட பயங்கரவாத செயல்கள் மற்றும் வன்முறைகளை பிரிட்டன் ஏற்காது. காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியாவுடன் இணைந்து எடுத்து வருகிறோம். இது தொடர்பாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவுடன் பேசி உள்ளார். உளவுத்துறை எச்சரிக்கை மற்றும் தகவல்களை பரிமாறி கொள்ள இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளோம். இதன் வாயிலாக காலிஸ்தான் பயங்கரவாதம் வேரறுக்கப்படும். ஜி - 20 மாநாட்டின் மையக்கருவாக வசுதேவ குடும்பகம் என்ற கருத்து இருப்பது மிகவும் சரியானது. என் குடும்பம் உள்ள இடத்தில், நான் பிரிட்டன் பிரதமராக வந்திருப்பது சிறப்பானது. இவ்வாறு அவர் கூறினார்.இரு தரப்பு பேச்சுபுதுடில்லி வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார். அப்போது, நம் நாட்டில் ஜெட் இஞ்சின்களை கூட்டாக தயாரிக்கும் ஒப்பந்தத்தின் முன்னேற்றம், எம்.க்யூ. - 9பி., என்ற ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானம் வாங்குதல், சிவில் அணுசக்தி பொறுப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் ஆகியவை குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டது. கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரிஷீயஸ் பிரதமர் பிரவிந்த்ஜக்நாத், நம் அண்டை நாடான வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருடனும் மோடி நேற்று பேச்சு நடத்தினார்.அடுத்த இரு தினங்களில் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள 15க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்களுடன், பிரதமர் மோடி இருதரப்பு பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.வெறிச்சோடிய தலைநகரம்கடும் போக்குவரத்து விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தலைநகர் புதுடில்லி வெறிச்சோடியது. பரபரப்பாக இயங்கும் முக்கிய சாலைகள் வாகனங்கள் நடமாட்டம் இன்றி காலியாக இருந்தன. மருந்து சேவை, பரிசோதனை மையங்களுக்கான மாதிரிகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மட்டும் இயங்கின. இந்தியா கேட், சி - ஹெக்ஸகன் உட்பட அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியா கேட், கடமை பாதை போன்ற இடங்களில் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநாடு முடியும் வரை வீடுகளிலேயே இருங்கள். கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் வரை மேப் மை இந்தியா செயலியை பயன்படுத்துங்கள் என போலீசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட சந்தைகள் மூடப்பட்டன. வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் காணப்பட்டனர்.பரிசோதனைக்கு பிறகே உணவுமாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்குவதை உறுதி செய்ய, புதுடில்லி அரசின் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ஹோட்டல்களின் சமையலறை மற்றும் பணியாளர்களின் சுகாதாரம், பாத்திரங்களை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கண்காணிப்பர். அதேபோல, உணவு பரிமாறுவதற்கு முன், சமைத்த உணவு வகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்வர். சமையலுக்கான மூலப்பொருட்களின் மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து, அதன் அறிக்கை வந்த பின் தான் சமையல் செய்ய அனுமதி வழங்கப்படும். ஆய்வக பரிசோதனை நடத்தாமல் சமையலறைகளில் எந்த உணவுப் பொருட்களும் வழங்கப்படாது. தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு, சிற்றுண்டிகள் மற்றும் அனைத்து பானங்களின் மாதிரிகளும் பரிசோதனைக்குப் பிறகே வழங்கப்படும்.பொதுவாக, உணவு மாதிரிகள் அறிக்கைகள் வர 15 நாட்கள் ஆகும் நிலையில், உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு, சில மணி நேரங்களில் பரிசோதனை முடிவு வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்