தொல்காப்பியர் சிலைக்கு மரியாதை
சென்னை: தமிழின் முதல் இலக்கண நுாலான தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியரின் சிலைக்கு, தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.எழுத்து, சொல், பொருள் என, மூன்று பகுதிகளாக பிரித்து, ஒவ்வொன்றுக்கும் ஒன்பது இயல்கள் என்ற அடிப்படையில், 27 இயல்களில் 1,610 பாடல்களை, 2,000 ஆண்டுகளுக்கு முன் எழுதி, தொல்காப்பியம் எனும் நுாலின் வாயிலாக தமிழ் மொழிக்கு இலக்கணம் கற்பித்தவர் தொல்காப்பியர். இதை, முதலில் பதிப்பித்தவர் யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளை.சென்னை, மெரினா கடற்கரையின் எதிர்ப்புறம் உள்ள சென்னை பல்கலை இணைப்பு வளாகத்தில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், 7 அடி உயர பீடத்தில் வெண்கலத்தினால் ஆன தொல்காப்பியரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு, சித்திரை முழுநிலவு நாளான நேற்று, தமிழ் வளர்ச்சித்துறை செயலர் சுப்பிரமணியன், செய்தி, மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அவ்வை அருள் உள்ளிட்டோர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.