ஊழலை ஒழிக்க ஹெல்ப்லைன்!
அகமதாபாத் ஐ.ஐ.எம். -இல் படிக்கும் 6 மாணவர்கள் கொண்ட குழு, இந்த திட்டத்திற்கான அடிப்படை வேலைகளை துவக்கியுள்ளது. இந்த திட்டம் சம்பந்தமான விவரங்களை அம்மாணவர்கள் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல்கலாம், ஐ.ஐ.எம். பேராசிரியர் திரு. அணில் குப்தா ஆகியோரிடம் தெரிவித்து, அவர்களின் ஆதரவையும், பாராட்டுதலையும் பெற்றுள்ளனர். தொடர் ஊழல் புகார்களால் நாடே குலுங்கிவரும் சூழலில், இதுபோன்றதொரு முன்முயற்சி கவனிக்கத்தக்கதாக உள்ளது. ஊழல் பிரச்சினை சம்பந்தமாக அந்த மாணவர்கள் குழு ஒரு சிறிய சர்வே எடுத்துள்ளதுடன், ஊழல் தடுப்பு பியூரோ மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல அரசு நிறுவனங்களுக்கும் சென்று ஆலோசித்துள்ளனர். இந்த ஹெல்ப்லைனில் வரும் ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான புகார்கள், அப்படியே சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு விடுவதில்லை. ஓய்வுபெற்ற அதிகாரிகள் மூலம் புகார்கள் ஆராயப்பட்டு, உண்மைநிலை கண்டறியப்பட்டு, இறுதியில் பொருத்தமான மற்றும் உண்மையான புகார்கள் மட்டுமே அனுப்பப்படும். இதனால் பழிவாங்குதல் நடவடிக்கைகளை தவிர்க்க முடியும். மேலும் இதன் வெற்றிக்கு அனைத்து முக்கிய சட்டப்பூர்வ நிறுவனங்களின் உதவிகளும் கோரப்பட்டுள்ளன. இந்த ஹெல்ப்லைன் மூலமாக, ஊழல் அதிகாரிகளுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி, அவர்களை நேர்மையான பாதையில் திருப்ப முடியும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.