பிளஸ் 2 பொதுத்தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி சதவீதம் குறைய காரணமென்ன?
கோவை : பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், சில பாடங்களில் குறைந்துள்ளது. குறிப்பாக, கணக்குப்பதிவியல், வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களில், தேர்ச்சி அடைந்த மாணவர்களின் சதவீதம் சற்று குறைவு.கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 572 மாணவர்களும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 490 மாணவர்களும் 100 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதேபோல், வரலாறு -3, புள்ளியியல் -2, விலங்கியல்- 1, உயிரியல்- 8, மற்றும் தாவரவியல்- 1 உள்ளிட்ட பாடங்களில், ஒற்றை இலக்கிலே மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.பாடப் பகுதிகள் அதிகம்தமிழ், வரலாறு, அரசியல் அறிவியல், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களில் உள்ள விரிவான பாடத்திட்டங்களை கண்டு, பெரும்பாலான மாணவர்கள், அவற்றை முதன்மை பாடமாக தேர்வு செய்த தயங்குகிறார்கள். இதற்கேற்ப, பிளஸ் 1 நிலை முதல் கணிதத்துடன் கூடிய அறிவியல் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையும், கடந்த சில ஆண்டுகளில் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.அரசுப் பள்ளி ஆசிரியர் கூறியதாவது:பாடப் பகுதிகள் அதிகம் என்பதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்காக தொடர் பயிற்சி வகுப்புகள், மாதத் தேர்வுகள், முன்னோட்டத் தேர்வுகள் அனைத்தும் நடத்தப்பட்டன. அதே சமயம், கணக்குப்பதிவியல் மற்றும் அரசியல் அறிவியல் போன்ற பாடங்கள் அணுகுவதற்கும், புரிந்து எழுதுவதற்கும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.நீட் தேர்வை மையமாகக் கொண்டு, மாநில பாடத்திட்டத்தில், 2018-2019ம் ஆண்டில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. 2024ம் ஆண்டில், சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பின் அறிவியல் பாடங்களில், சில பாகங்கள் குறைக்கப்பட்டன.இவ்வாறு, அவர் கூறினார்.மற்றோர் ஆசிரியர் கூறுகையில், இந்த ஆண்டின் கணக்குப்பதிவியல் வினாத்தாள் கடினமாக இருந்தது. இதனால், கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். கல்வி முறையில் மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறனின்படி, தேர்வுகளை எளிதாக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவருதல் அவசியம் என்றார்.விரைவில் ஆலோசனைவெளியாகியுள்ள தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் உள்ளிட்ட அம்சங்களை மதிப்பிட, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுடனும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார். அந்தக் கூட்டத்தில், வரும் கல்வியாண்டில் மாணவர்களின் கற்றல் திறனை உயர்த்தும் வகையில், தேவையான நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.