தொல்லியல் ஆய்வு: 250 ஆண்டுகள் பழமையான போர் வாள்கள் கண்டுபிடிப்பு
பழநி: விருப்பாட்சியை ஆண்ட கோபால் நாயக்கரின் தளபதி பயன்படுத்திய 250 ஆண்டுகள் பழமையான வாள்கள் பழநி அருகே போடுவார்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழநி தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன், பழநியாண்டவர் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ரவிச்சந்திரன், பேராசிரியர் மகுடீஸ்வரன் ஆகியோர் போடுவார்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். விருப்பாட்சியை ஆண்ட கோபால் நாயக்கர் பயன்படுத்தி, தனது தளபதிக்கு பரிசாக வழங்கிய 250 ஆண்டுகள் பழமையான 3 வாள்கள் போடுவார்பட்டியில் உள்ள தர்ஹாவில் இருந்தது தெரியவந்தது. ஆய்வாளர் நந்திவர்மன் கூறியதாவது: விருப்பாட்சி கோபால் நாயக்கர் 19 வது பாளையக்காரராக1762 முதல் 1801 ஆண்டுவரை ஆட்சி செய்தார். அப்போது, ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரன் சின்னமலையுடன் சேர்ந்து போராடினார். இவரது தளபதி பாபுஜி சாயபுக்கு வழங்கப்பட்ட 3 வாள்கள் அவரது நினைவிடத்தில் வைத்து, அவரது வாரிசுகளால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பெரிய வாள் 94 செ.மீ. நீளமும், 4.5 செ.மீ., அகலமும் கொண்டதாக உள்ளது, என்றார்.