திண்டுக்கல்லில் ரூ.39 லட்சம் ஆன்லைன் டிரேடிங் மோசடி; கர்நாடக மாணவர்கள் 2 பேர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி ரூ.39 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கர்நாடகா கல்லுாரி மாணவர்கள் இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் சரவணக்குமார் 35. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பிப்ரவரியில் முகநுால் பக்கத்தில் ஆன்லைன் டிரேடிங் மூலம் குறைந்த பணத்தை முதலீடு செய்து அதிக பணத்தை சம்பாதிக்கலாம் என்ற விரம்பரத்தை பார்த்தார். அதில் உள்ள அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டார்.எதிர் திசையில் பேசிய நபர் பிறமொழி கலந்த தமிழில் பேசியப்படி ஆன்லைன் டிரேடிங் குறித்த விபரங்களை தெரிவித்தார். இதை நம்பிய சரவணக்குமார் அந்த நபர் கூறிய வங்கி கணக்கு எண்ணில் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.39 லட்சத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பினார். பணத்தை பெற்று கொண்ட நபர் சில நாட்களில் தன்னுடைய அலைபேசி எண்ணை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவானார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரவணக்குமார் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் விக்டோரியா, எஸ்.ஐ.,லாய்டுசிங் தலைமையிலான போலீசார் விசாரித்ததில் மோசடி செய்தது கர்நாடகாவை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் ஆயுஷ்20, ஹர்ஷா20, என தெரியவந்தது. கர்நாடகா சென்று இருவரையும் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்ததில் அவர்களது நண்பரான கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் கிரிக்கெட் விளையாடும் போது தங்களது வங்கி எண்களை பெற்று அவருக்கு தெரிந்த ஒருவரிடம் கொடுத்துள்ளார். அவர் தான் இதை செய்ததாக கூறி உள்ளனர். இதில் ஈடுபட்ட முக்கிய நபர் குறித்து விசாரணை நடத்துகிறோம் என்றனர்.