கூட்டுறவு வங்கியில் ரூ.5 லட்சம் வரை கல்வி கடன் தர மறுத்தால் நடவடிக்கை
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில், பயிர்க்கடன், நகைக்கடன் உட்பட, 17 வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன.முன்னுரிமைமாநில தலைமை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டு றவு வங்கிகளில், ஒரு லட்சம் ரூபாய் வரை கல்வி கடனும் வழங்கப்பட்டது. இந்த விபரம், பலருக்கு தெரியாமல் இருந்ததால், தேசிய வங்கிகளில் கல்வி கடன் வாங்கவே முன்னுரிமை தந்து வருகின்றனர்.இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கல்வி கடன் உச்ச வரம்பை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி, கூட்டுறவு துறை பிப்., 6ல் உத்தரவிட்டது.அதன்படி, தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கல்வி கடன் வழங்க அனுமதிக்கப்பட்டது.ஒரு லட்சம் ரூபாய் வரை பிணையமின்றி கடன் வழங்கலாம் என்றும், அதற்கு மேல், 5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு, பிணையம் பெறப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.கல்வி கடன் வழங்க ஏதுவாக, வங்கி மற்றும் சங்க துணை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது. அதற்கு ஏற்ப, பல சங்கங்களில் இன்னும் விதிகள் திருத்தப்படவில்லை.இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கான முழு நிதி அரசிடம் இருந்து வரவில்லை. இதனால், சங்கங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன.பதில் தருவதில்லைஅதேபோல, கல்வி கடன் வழங்கி தள்ளுபடி செய்யப்பட்டால் நெருக்கடி ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, கல்வி கடன் தொடர்பான தகவலை மக்கள் கேட்டால், உரிய பதில் அளிப்பதில்லை என்றும், தகவல் தெரிவிக்க மறுப்பதாகவும் புகார்கள் வருகின்றன.எனவே, புதிய உத்தரவுப்படி, 5 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் வழங்க வங்கிகள் மறுத்தாலோ, அந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகளிடம் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.