உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் வரும் 9, 10ல் ‘தினமலர்’ - வழிகாட்டி!

திருப்பூர்: பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர், அடுத்து என்ன படிக்கலாம், எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கு, சிறந்த ஆலோசனையை அள்ளித்தரும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூரில் நாளையும், நாளை மறுதினமும் நடக்கிறது; கல்வியாளர்கள் பங்கேற்று, ஆலோசனை வழங்குகின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். இடைப்பட்ட காலத்தில், உயர்கல்வியில் எந்த துறையை தேர்வு செய்வது, என்னென்ன துறைகளில், வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவதில் கவனம் செலுத்துகின்றனர். பெற்றோரும், தங்களது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக்கி தரும் வகையில், சிறந்த உயர்கல்வி பெற்றுத்தர, ஆர்வம் காட்டுகின்றனர். எந்த படிப்பை தேர்வு செய்வது, எந்த கல்லூரியில் படிப்பது, என்னென்ன துறை சார்ந்த படிப்புகளுக்கு, என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை, மாணவ மாணவியருக்கு தெளிவாக விளக்கும் வகையில், தினமலர் நாளிதழ் சார்பில், திருப்பூரில் நாளையும், நாளை மறுதினமும் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருப்பூர் தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 10:00 முதல், 12:00 மணி வரை நடக்கும் கருத்தரங்கில், கல்வியாளர்கள் ஆலோசனை வழங்குவர். நாளைய கருத்தரங்கில், மரைன் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட் குறித்து சுரேஷ்குமார், கேரியர் கவுன்சிலிங் குறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, சி.ஏ., ஐ.சி.டபிள்யு.ஏ., ஏ.சி.எஸ்., குறித்து சரவண பிரசாத், அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் எதிர்காலம் திருநாவுக்கரசு, ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் எதிர்காலம் பற்றி ரமேஷ் பிரபா ஆகியோர் பேசுகின்றனர். நாளை மறுதினம் (10ம் தேதி), காலை, 10:00 முதல், 12:00 மணி வரை நடக்கும் கருத்தரங்கில், கல்வி கடன் குறித்து வணங்காமுடி, வேளாண் படிப்பு குறித்து சுதாகர், இன்பர்மேஷன் டெக்னாலஜி பற்றி கணேஷ் மகாதேவன், சிவில் சர்வீஸ் படிப்பு எதிர்காலம் குறித்து விஜய கார்த்திகேயன் ஆகியோர் பேசுவர். கருத்தரங்கு மற்றும் கண்காட்சி என, இரண்டு விதமாக, நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை, 10:00 முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில், கல்வி நிறுவனங்களின் அரங்குகளை பார்வையிட்டு, சிறப்பம்சங்களை அறியலாம். அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை, எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் தரும் அருமையான நிகழ்ச்சி, மாணவர் கல்வி நலன் கருதி, நம் திருப்பூரில், தினமலர் நாளிதழ் நடத்துகிறது. நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும், வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படும்; அனுமதி இலவசம். கேண்டீன் வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை, தினமலர் நாளிதழுடன், பாரத் பல்கலை, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி குழுமம், ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, ஸ்ரீசக்தி கல்வி நிறுவனங்கள், நேரு கல்வி குழுமம், கே.எம்.சி.எச்., டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், நிப்ட் டீ கல்லூரி, ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், ஆர்.வி.எஸ்., கல்வி குழுமங்கள் ஆகியன இணைந்து வழங்குகின்றன. கல்வி நலன் கருதி நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, முழுக்க முழுக்க உங்களுக்கானது; மாணவச் செல்வங்களே, மிஸ் பண்ணிடாதீங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்