அளவோடு பழகுவோம்!
ஞாபக மறதி என்பது அனைவருக்கும் இயற்கையான ஒன்றே... எனினும், தங்களது மூளையில் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்களை டிஜிட்டல் சாதனத்தில் பதிவு செய்துவிட்டு, அதை நம்பியே இருப்பது 'டிஜிட்டல் அம்னீஷியா'விற்கு வழிவகுக்கிறது. இந்நோய் அன்றாட வாழ்க்கை, படிப்பு, வேலை, நட்பு போன்ற அனைத்தையும் பாதிக்கிறது! டிஜிட்டல் சாதனங்களை நம்பி தொலைபேசி எண்கள், பாஸ்வேர்ட், பின் எண், அக்கவுண்ட் நம்பர் என அனைத்தையும் அலைபேசியில் சேமித்து வைத்துவிட்டு அவற்றை மூளையில் இருந்து அழித்து விட்டோம். மொபைல் போன் தொலைந்துவிட்டால் எந்த எண்ணும் நினைவில் இருக்காது. சிறு சிறு கணக்குகளுக்கும் தொழில்நுட்ப கருவியையே தேடுகிறோம். இவ்வாறு, தொழில்நுட்பத்திற்கும், ஸ்மார்ட்போனிற்கும் அடிமையாதல் என்பது மூளையில் உருவாகும் புதிய நினைவுகளுக்கான திறனை குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இது டிஜிட்டல் அம்னீஷியாவுக்கு வழிவகுக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் இது பரவலாக பரவி வரும் ஒரு வியாதி. பள்ளி மாணவர்களிடையேயும் இது பரவுகிறது என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். மொபைல் போன்களின் அதிகப்படியான பயன்பாடு மன அழுத்தம் மற்றும் மறதியை ஏற்படுத்தும் அல்லது நினைவாற்றலை மோசமாக பாதிக்கும் என்கின்றனர், உளவியலாளர்கள்.கண்களும், தூக்கமும் பாதிப்படைவதால் மூளையில் உள்ள செல்கள் சேதமடைந்து, புதிய நினைவுகள் உருவாகும் திறன் குறைகிறது. அதுமட்டுமின்றி, அதிக டிஜிட்டல் பயன்பாடு ஒருவரின் 'ஐக்யூ'வை கணிசமாகக் குறைக்கிறது என ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.இதை சமாளிக்கும் வழிமுறைகள்:*உறங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே டிஜிட்டல் சாதனங்கள் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும்*வாரத்திற்கு ஒரு நாளாவது டிஜிட்டல் சாதனப் பயன்பாடு இல்லாத நாளாக கடைபிடிக்க முயற்சி எடுக்க வேண்டும்*விடுமுறை நாட்களில் கணிசமான நேரத்தை உடற்பயிற்சி, யோகா, வெளி விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபட வைக்க வேண்டும்*டிஜிட்டல் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பள்ளிகள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்*உணவுக்கென்று டயட்டை உருவாக்குவதுபோல், டிஜிட்டல் பயன்பாட்டிற்கும் ஒரு சார்ட்டை உருவாக்கி, எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்ற வரையரையை வகுக்க வேண்டும்*அன்றாட பணிகள், அத்தியாவசிய அலைபேசி எண்கள், முக்கிய தினங்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை குழந்தைகளை மனப்பாடம் செய்து கொள்ள பயிற்சி கொடுக்க வேண்டும்தொழில்நுட்பம் நம் சமூகத்தின் இன்றியமையாத அங்கமாகிவிட்டது என்பதால், அவற்றின் தாக்கங்களை கவனிக்காமல் விட முடியாது. டிஜிட்டல் அம்னீஷியாவிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரு சில முன்னெடுப்புகளை எடுப்பது முக்கியமானதாகிறது. குறிப்பாக, குழந்தைகளை இதிலிருந்து பாதுகாப்பது இன்றியமையாத ஒன்று. அவர்களுக்கு இப்போதிருந்தே டிஜிட்டல் பயன்பாட்டின் நன்மை, தீமைகளை கற்றுக்கொடுத்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.