பிளஸ் 1 இறுதி கட்ட சேர்க்கை
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் மைக்கேல் பென்னே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2020-21 ஆம் கல்வியாண்டில், புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கு, பள்ளி அளவிலான முதல் மற்றும் இரண்டாம் கட்ட சேர்க்கைகள் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மீதமுள்ள இடங்களை சிறப்பு கலந்தாய்வு மூலம் நிரப்ப பள்ளி கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்காக விண்ணப்பித்து, இடம் கிடைக்காதவர்களும், அண்மையில் 10ம் வகுப்பு துணை பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், இதுவரை எந்த பள்ளியிலும் சேராத மாணவ, மாணவிகளுக்கும் இறுதி வாய்ப்பாக கலந்தாய்வு நடத்தி பிளஸ் 1 வகுப்பு சேர்க்கை ஆணை வழங்கப்பட உள்ளது. எனவே, அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்காக மாணவ, மாணவிகள் தங்களது அசல் இணையதள மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச்சான்றிதழ், குடியிருப்பு, நிரந்தர ஒருங்கிணைந்த சான்றிதழ் அல்லது இடஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் நகல்கள் (பிக், சாதி சான்றிதழ்) ஆகியவற்றுடன், முத்திரையார்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல் நிலைப் பள்ளியில், வரும் 10ம் மற்றும் 11ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.அதில், 499 மதிப்பெண் முதல் 300 வரை பெற்ற மாணவர்கள் 10ம் தேதி காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரையிலும், 299 மதிப்பெண் முதல் 250 வரை பெற்ற மாணவர்கள், மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் கலந்து கொள்ளலாம். 249 முதல் 175 வரை பெற்ற மாணவர்கள் 11ம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். புதுச்சேரி குடியிருப்பு பெறாத மாணவர்கள், 11ம் தேதி மதியம் 2:30 மணிக்கு கலந்தாய்வுக்கு வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.