உள்ளூர் செய்திகள்

1 முதல் 10ம் வகுப்பு வரை தெலுங்கு பாடம் கட்டாயம்: தெலுங்கானா அரசு அதிரடி

ஹைதராபாத்: தெலுங்கானாவில் வரும் கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, தெலுங்கு மொழிப்பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்நிலையில், தெலுங்கானாவின் தாய்மொழியான தெலுங்கை, பள்ளி மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வகையில், அதை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடந்த 2018ல் பள்ளிகளில் தெலுங்கு மொழிப்பாடத்தை கட்டாயமாக பயிற்றுவிக்கும் வகையில் மாநில அரசு சட்டம் இயற்றியது. எனினும், இதற்கு முன் இருந்த பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியில், அச்சட்டத்தை பல்வேறு காரணங்களால் முழுதும் அமல்படுத்தவில்லை.எனவே, தற்போது ஆட்சியில் உள்ள எங்கள் அரசு, தெலுங்கு மொழிப்பாடத்தை மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் மட்டுமின்றி மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 1 - 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழிப்பாடத்தை கட்டாயமாக பயிற்றுவிக்க உத்தரவிடுகிறது.இது, வரும் 2025 - 26 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். தாய்மொழி தெலுங்கு அல்லாத மாணவர்களுக்கு, எளிதில் அம்மொழிப்பாடத்தை கற்று தேர்வு எழுத வசதியாக, சிம்பிள் தெலுங்கு என்ற பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து பா.ம.க., தலைவர், அன்புமணி கூறுகையில், தமிழகத்தில் மட்டும்தான் தாய்மொழியில் படிக்காமல் பட்டம் பெறுகிற கேவல நிலை உள்ளது. கேரள மாநிலத்தில் மலையாளம், கர்நாடகாவில் கன்னடம், ஆந்திராவில் தெலுங்கு படிக்காமல் பட்டம் பெற முடியாது. தமிழ் குறித்து போலி நாடகம் ஆடிக்கொண்டிருக்கும், தி.மு.க., அரசுதான் இதற்கு காரணம். நீங்கள் சொல்கிற இருமொழிக் கொள்கை தவறானது. ஒருமொழிக் கொள்கைதான் சரி.மூன்றாவது, நான்காவது மொழிப்போர் என, நாடகம் ஆட வேண்டாம். தேர்தல், அரசியலுக்காக போர் நடத்துவோம் என, தி.மு.க., நாடகம் ஆடுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்