உள்ளூர் செய்திகள்

பிளஸ் 1, பிளஸ் 2வில் தமிழ் பாடவேளை குறைப்பா?

சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2வில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான பாடவேளை குறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி துறை பாடத்திட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், ஆண்டுக்கு 8.5 லட்சம் பேர் படித்து, பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இவர்களில், 8 லட்சம் பேர் வரை தேர்ச்சி பெற்று, உயர்கல்வி செல்கின்றனர். இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2வில், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கு, அரசு பள்ளிகளில், ஒரு வாரத்துக்கு, நான்கு பாட வேளைகள் மட்டும் ஒதுக்கப்படுகின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளியல், கணிதவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற முக்கிய பாடங்களுக்கு, வாரத்துக்கு ஐந்து பாடவேளைகள் கருத்தியல் என்ற, தியரிக்கும், இரண்டு பாட வேளைகள் செய்முறை பயிற்சிக்கும் ஒதுக்கப்படுகின்றன.இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 2 பொது தேர்வில், முக்கிய பாடங்களில், 98 முதல், 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில், 96 முதல் 97 சதவீதம் பேர் தான் தேர்ச்சி பெறுகின்றனர். அதாவது, முக்கிய பாடங்களை விட மொழி பாடங்களில் தேர்ச்சி குறைகிறது. எனவே, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி பாடங்களை நடத்த, முக்கிய பாடங்களின் தியரி வகுப்புக்கு இணையாக, கூடுதலாக ஒரு பாடவேளை ஒதுக்கி, மாணவர்களுக்கு மொழி பாடத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்