கல்விக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில் கல்விக்காக மதிப்பிடப்பட்ட 70 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையைவிட, எதிர்வரும் 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட உள்ளது. அதில் கூடுதலாக 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஐ.டி. துறை முதலீடாக இருக்கும் என்று ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமரின் கல்வி ஆலோசகர் சாம் பிட்ரோடா கூறினார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், "இந்திய கல்வித்துறையில் அதிகளவிலான தனியார் பங்களிப்பையும், வெளிநாட்டு முதலீட்டையும் ஈர்க்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கல்வி அமைப்பை நாம் சுதந்திரமானதாக மாற்ற வேண்டும். பொருளாதார விஷயத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு என்ன நடந்ததோ, அதேபோன்றதொரு மாற்றம் தற்போது கல்வித்துறையிலும் நடக்க வேண்டியுள்ளது. கல்வித்துறையை சீரமைப்பதற்கான பல நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும், முன்னேற்றம் திருப்தி தருவதாக இல்லை. நாங்கள் அரசுக்கு பல ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். கல்வி அமைச்சர்தான் அதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதுவரை எங்களுக்கு திருப்திதரும் வகையில் நடவடிக்கை இல்லை. வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சாவழியினர் இந்திய கல்வித்துறையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். அவர்களுக்கான வாய்ப்புகள் இங்கே குவிந்திருக்கின்றன. அதேசமயம் உள்நாட்டில் இருக்கும் தனியார்களும் முதலீடு செய்ய முன்வர வேண்டும்" என்று பேசினார்.