உள்ளூர் செய்திகள்

1,000 பள்ளி வாகனத்துக்கு எப்.சி., மறுப்பு; 70 சதவீத ஆய்வு பணிகள் நிறைவு

சென்னை: தமிழகத்தில, 70 சதவீத பள்ளி, கல்லுாரி வாகனங்களில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு பணி முடிந்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு இருந்த 1,000 வாகனங்களுக்கு எப்.சி., எனும் வாகன தகுதி சான்று வழங்க மறுக்கப்பட்டுள்ளது என, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் இயக்கப்படும், 37,788 பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து போக்குவரத்துதுறை, கல்வித்துறை, போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை, 70 சதவீத வாகனங்களில், 16 அம்ச பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில், கே.கே.நகர் ஆர்.டி.ஓ., எல்லைக்குட்பட்ட பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த 51 வாகனங்களில், ஆய்வு நடந்தது.வருவாய்த்துறை அதிகாரி முருகன், வட்டார போக்குவரத்து அதிகாரி தினகரன், வாகன ஆய்வாளர் ஜெயகணேஷ் உள்ளிட்டோர் சோதனை மேற்கொண்டனர். இதில், லேசான பாதுகாப்பு குறைபாடு இருந்த நான்கு வாகனங்களுக்கு, எப்.சி., எனப்படும் தகுதி சான்று வழங்க மறுக்கப்பட்டுள்ளது.தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:பள்ளி வாகனங்களில் அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி, ஹேண்ட் பிரேக், டிரைவர்களின் கண் பார்வை திறன், வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட, 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்.அவசர கால கதவுகள் செயல்படாதது, சிசிடிவி கேமரா இல்லை, தீயணைப்பு கருவி இல்லை என சில சிறிய குறைபாடுகள் 1,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்தது கண்டறிந்து, அதை சரி செய்ய உத்தரவிட்டுள்ளோம்.அந்த வாகனங்களுக்கு எப்.சி., எனப்படும் வாகன தகுதிச்சான்று மறுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் எஞ்சியுள்ள பள்ளி வாகனங்களிலும் ஆய்வு பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்