வரும் 15ல் குரூப் - 2, 2 ஏ முதன்மை எழுத்து தேர்வு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வரும், 15ல், 'குரூப் - 2, 2 ஏ' முதன்மை எழுத்துத் தேர்வு நடக்கிறது.இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒத்திவைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 'குரூப் - 2, 2 ஏ' பதவிகளுக்கான முதன்மை தேர்வானது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும், 15ல் நடக்கிறது. இத்தேர்வு, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 15ம் தேதி காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் நடக்க உள்ளது.முற்பகல், 114 தேர்வர்கள், பிற்பகல், 117 தேர்வர்கள் என மொத்தம், 231 பேர் எழுதுகின்றனர். முற்பகல் தேர்விற்கு காலை, 08:30 மணிக்குள்ளும், பிற்பகல் தேர்விற்கு மதியம், 01:30 மணிக்குள்ளும் தேர்வு கூடங்களுக்கு உரிய அனுமதி சீட்டுடன் தேர்வர்கள் வர வேண்டும்.தேர்வாணையத்தால் தடைசெய்யப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை தேர்வு கூடங்களுக்குள் கொண்டு வர அனுமதி இல்லை. மேலும், தேர்விற்கான பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.