பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 10ம் இடம்
நாமக்கல்: பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், நாமக்கல் மாவட்டம், 97.04 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 10ம் இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின. நாமக்கல்லில், கலெக்டர் துர்கா மூர்த்தி, பிளஸ் 2 தேர்ச்சி விபரங்களை வெளியிட்டார். அப்போது, அவர் கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், 196 பள்ளிகளை சேர்ந்த, 8,966 மாணவர்கள், 9,394 மாணவியர் என, மொத்தம், 18,360 பேர் தேர்வு எழுதினர். இதில், 8,633 மாணவர்கள், 9,184 மாணவியர் என மொத்தம், 17,817 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி, 96.29 சதவீதம், மாணவியரின் தேர்ச்சி, 97.76 சதவீதம் என, மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம், 97.04.நாமக்கல் மாவட்டத்தில், 95 அரசு பள்ளிகளை சேர்ந்த, 4,395 மாணவர்கள், 5,131 மாணவியர் என மொத்தம், 9,526 பேர் தேர்வு எழுதினர். இதில், 4,118 மாணவர்கள், 4,949 மாணவியர் என மொத்தம், 9,087 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி, 93.70 சதவீதம், மாணவியர்களின் தேர்ச்சி, 96.84 சதவீதம் என, மொத்த தேர்ச்சி சதவீதம், 95.39.பிளஸ் 2 பொதுத்தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில், 12 அரசு பள்ளிகள் உள்பட, 66 பள்ளிகள், 100க்கு, 100 தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், நாமக்கல் மாவட்டம், 2024-25ம் கல்வியாண்டில், மாநில அளவில், 15ம் இடம் பெற்றிருந்தது. இந்த கல்வியாண்டில், ஐந்து இடங்கள் முன்னேறி, மாநில அளவில், 10ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொ) பச்சமுத்து, மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலை) புருசோத்தமன், (தனியார் பள்ளிகள்) (பொ) சாந்தி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.