உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 ரிசல்ட் வந்தவுடன் பொறியியல் ரேங்க் லிஸ்ட்?

இந்த ஆண்டு, மே 14ம் தேதி, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெளியானது. ஆனால், ஜூன் 19ம் தேதி, பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பிரத்யேக ‘ரேண்டம்’ எண் வழங்கப்பட்டு, ஜூன் 25ம் தேதி, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. பொறியியல் கவுன்சிலிங் ஜூலை 5ம் தேதி துவங்கவுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெளியாவதற்கும், பொறியியல் கவுன்சிலிங்கிற்கும் இடையே நிறைய நாட்கள் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியின் காரணமாக, மாணவர்களிடையே பொறியியல் படிப்பில் சேர தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற குழப்பம் நிலவுவதுடன், இதைப் பயன்படுத்தி தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிகளவில் நன்கொடை பெற்று, மாணவர்களை நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ப்பதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங் நடைபெறும் நாட்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கவுன்சிலிங்கை முன்னதாகவே நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெளியான உடனே, பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, உயர் கல்வித்துறை செயலர் கணேசன் கூறியதாவது:அடுத்த ஆண்டிலிருந்து பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும்போதே, பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுவிடலாம். மற்ற போர்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பிறகு தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுக்கொள்ளலாம். அவ்வாறு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெளியாகும்போதே, தரவரிசைப்பட்டியலை வெளியிட்டால், மாணவர்கள் தாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அதன் பிறகு, தங்களுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை இருக்காது; அதிகளவில் நன்கொடை கொடுத்து தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர வேண்டிய அவசியமும் இருக்காது. இதுகுறித்து, விரிவாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். இவ்வாறு கணேசன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்