பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு கூடுதல் மையங்கள்
சென்னை: “பிளஸ் 2 பொதுத் தேர்வில் இட நெருக்கடியைக் குறைக்க, கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,” என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ்., நிதி பள்ளியின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “கல்விக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். 6,020 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை சமச்சீர் கல்விக்கான புத்தகங்கள் தரமாக தயாரிக்கப்பட்டு, முதல்வர் ஆலோசனைக்காக வைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வில் இடநெருக்கடி காரணமாக, மாணவர்கள் அருகாமையிலேயே அமர்ந்து தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க, பிளஸ் 2 பொதுத் தேர்வில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,” என்றார்.