இன்ஜி., 2ம் சுற்று கவுன்சிலிங்: 20 ஆயிரம் இடங்கள் நிரம்பின
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையானது ஆன்லைன் வழி கவுன்சிலிங்காக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 461 கல்லுாரிகளில் 1.63 லட்சம் இடங்கள் கவுன்சிலிங்கில் உள்ளன. அவற்றுக்கு 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அக். 1ல் சிறப்பு பிரிவுக்கும், அக்டோபர் 8 முதல் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கும் கவுன்சிலிங் துவங்கியது.பொதுப்பிரிவில் நேற்று வரை இரண்டு சுற்று கவுன்சிலிங் முடிந்துள்ளது. இன்னும் இரண்டு சுற்றுகள் மட்டுமே பாக்கி உள்ளது. முதல் சுற்றில் 12 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 7500 பேர் இடங்கள் பெற்றனர்.இரண்டாம் சுற்றில் 23 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 13 ஆயிரம் பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அதாவது முதல் சுற்றில் 5000 பேரும் இரண்டாம் சுற்றில் 10 ஆயிரம் பேரும் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை.இதுவரை மொத்தம் 35 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டதில் 20 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் 1.43 லட்சம் இடங்களுக்கு 77 ஆயிரம் பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளனர்.காலியிடம் எங்கே* முன்னணி தனியார் கல்லுாரிகளில் பெரும்பாலான இடங்கள் முதல், இரண்டாம் சுற்றில் நிரம்பியுள்ளன. அண்ணா பல்கலையில் தமிழ் வழி உள்பட அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. அருந்ததியர் பிரிவு இடங்கள் சில மட்டும் காலியாக உள்ளன* மூன்றாம் சுற்றுக்கு அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள் மற்றும் மண்டல கல்லுாரிகளிலும் இடங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும் இடங்கள் காலியாக உள்ளன.