பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
அடுத்த ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்கும் என்று கூறப்படுகிறது. எழுத்துத் தேர்வுக்கு பின் செய்முறைத் தேர்வு நடைபெறலாம் என்ற கருத்து பரவலாக இருந்ததாலும், அது தொடர்பாக, தமிழக அரசு எந்தவித அறிவிப்பும் செய்யாததாலும், தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை செய்வதில் தேர்வுத் துறைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருந்தது. ஆனால், கடந்த 7ம் தேதி சென்னையில் நடந்த ஒரு விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, பொதுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நிலவிவந்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தெளிவான அறிவிப்புகளை வெளியிட்டார். ‘பதிவெண் எழுதுதல் உள்ளிட்ட பணிகளுக்காக, வரும் பொதுத்தேர்வு முதல் கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்படும் 10 நிமிட கூடுதல் நேரத்துடன் இதையும் சேர்த்து 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். மற்றபடி வேறு எந்தவிதமான மாற்றங்களும் கிடையாது. செய்முறைத் தேர்வுகள் வழக்கம் போலவே நடைபெறும்’ என்று அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு காரணமாக, வேறு எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். தேர்வுத் துறையும் தனது வழக்கமான முன்னேற்பாடுகளை துவக்கி விட்டது. முக்கியமாக வினாத்தாள் தயாரிப்பு பணிகளை தேர்வுத் துறை முடுக்கி விட்டுள்ளது. வினாத்தாள் தயாரிப்பதில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழுவைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் வினாத்தாள்கள் தயாரிக்கப்படும். ஒரு பாடத்திற்கான வினாத்தாளை நான்கு குழுக்கள் தனித்தனியே தயாரித்து, அதை சீலிட்டு தேர்வுத் துறை இயக்குனரிடம் சமர்ப்பிக்கும். சீலிடப்பட்ட நான்கு கவர்களில் இருந்து ஒரு கவரை இயக்குனர் தேர்வு செய்ததும், அந்த கவர் அப்படியே அச்சகங்களுக்கு சென்றுவிடும். இது தான் வழக்கமான நடைமுறை. அதன்படி இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுப் பாடங்கள் அனைத்திற்கும் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ள ஆசிரியர் வல்லுனர் குழு, வினாத்தாளை தயாரிப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை துவக்கியுள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி ஆரம்பத்திலேயே துவங்கிவிடும். அதற்கு இன்னும் 2 மாதங்கள் தான் இருக்கின்றன. செய்முறைத் தேர்வு முடிந்த ஒரு வாரத்தில் எழுத்துத் தேர்வு துவங்கி விடும். எனவே, தேர்வுத் துறையை பொறுத்தவரை தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. அடுத்த ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டு விட்டதால், அதற்கேற்ப தற்காலிக அட்டவணை தயாரிக்கும் பணி விரைவில் துவங்கும் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்காலிக அட்டவணை தயாரானதும், அது குறித்து கல்வித்துறை அதிகாரிகள், தேர்வுத் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்படும். அதில், மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தால், உரிய மாற்றங்கள் செய்யப்படும். இல்லையென்றால், தற்காலிக அட்டவணையை தேர்வுக்கான அட்டவணையாக உறுதி செய்து அறிவிக்கப்படும். பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 2ம் தேதி, திங்கட்கிழமை முதல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த தேர்வுகள், 25ம் தேதி வரை நடைபெறலாம் என்றும், அதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு தேர்வுகள் 27ம் தேதி முதல் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் முதல் வாரம் வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும். இதனிடையே, தேர்வெழுதும் மாணவ, மாணவிகள் குறித்த புள்ளி விவரங்களை தொகுக்கும் பணியும் நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் மாணவ, மாணவிகள் பட்டியல் மாவட்ட வாரியாக தயாராகி விடும். கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரத்து 91 மாணவர்கள் எழுதினர். இந்த எண்ணிக்கை, 9 லட்சத்து 50 ஆயிரமாக, அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வை 5 லட்சத்து 87 ஆயிரத்து 994 மாணவர்கள் எழுதினர். இந்த மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரமாக உயரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சரியான புள்ளி விவரம் இம்மாத இறுதியில் தெரியும்.